
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்ததில் அரசியல் இல்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை செனடாப் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் வைத்து, முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று (ஜூலை 31) காலை சந்தித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நலம் விசாரித்தார்.
அப்போது துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ், தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பு தொடர்பாக கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது,
`கேப்டன் அவரை (முதல்வர்) அண்ணன் என்றுதான் அழைப்பார் அவரும் கேப்டனை அண்ணன் என்றுதான் அழைப்பார். இது நூறு சதவீதம் மரியாதை நிமித்தமான, அவரது உடல்நலம் குறித்து கேட்டறிவதற்கான சந்திப்பு.
நலமுடன் இருக்கிறேன், இன்று முதல் எனது பணிகளைத் தொடங்குகிறேன் என்று அவர் கூறினார். தலைமைச் செயலகம் செல்வதற்கு தயாராக இருந்தார். இதை ஏன் கூறுகிறேன் என்றால், எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தது கலைஞர்தான். கேப்டனுக்கும், கலைஞருக்கும் இடையில் 40-45 ஆண்டுகாலம் நீடித்த நட்பு இருந்தது.
கேப்டனுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக தொலைபேசியில் அழைத்து அவர் (ஸ்டாலின்) விசாரிப்பார், நேரடியாகவும் வந்து சந்தித்திருக்கிறார். அதேபோல கேப்டனுக்கு உடல்நல பாதிப்பு குணமாகவேண்டி பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
எனவே அவரது உடல்நலனில் அக்கறைகொண்டு குடும்ப ரீதியாக, நட்பு ரீதியாக அவரை நேரடியாக சந்தித்தோம். மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார். நன்றாக இருப்பதாகக் கூறினார். கேப்டன் சார்பிலும், தேமுதிக சார்பிலும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தோம்’ என்றார்.
இதைத் தொடர்ந்து, `முதல்வருடனான சந்திப்பு குறித்த புகைப்படத்தைப் பார்த்து தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சி நீடிக்குமா?’ என்று செய்தியாளர் ஒருவர் பிரேமலதாவிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கும் `எங்கள் தொண்டர்களுக்கு மகிழ்ச்சி என்றால், அது எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் இதை அரசியல் கண்ணோட்டத்தில் பத்திரிகையாளர்கள் பார்க்கிறீர்கள். எங்களைப் பொறுத்தளவில் இது நட்புரீதியான, நலம் விசாரிக்கும் வகையிலான சந்திப்பு மட்டுமே’ என்றார்.