
அதிமுகவுடன் கூட்டணி அமைந்தபோதே தேமுதிகவுக்கு மாநிலங்களவையில் ஒரு இடம் உறுதி செய்யப்பட்டதாகவும், நேரம் வரும்போது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தகவலளித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.களாகப் பதவி வகிக்கும் திமுகவைச் சேர்ந்த எம். சண்முகம், பி. வில்சன், எம்.எம். அப்துல்லா அதிமுகவைச் சேர்ந்த என். சந்திரசேகரன், மதிமுகவைச் சேர்ந்த வைகோ, பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூலையில் முடிவுக்கு வருகிறது.
இவர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் முன்பே 6 புதிய மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது தமிழக சட்டப்பேரவையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கைப்படி திமுகவால் 4 எம்.பி.க்களையும், அதிமுகவால் 2 எம்.பி.க்களையும் தேர்வு செய்ய முடியும்.
இந்நிலையில், தேமுதிகவின் 25-வது கொடிநாள் விழாவை அடுத்து சென்னை கோயம்பேடு கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடியை ஏற்றினார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், மாநிலங்களவையில் எம்.பி. பதவி பெறுவது தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளிவருவது குறித்து பிரேமலதா விஜயகாந்திடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் கூறியதாவது,
`பேச்சுவார்த்தை என்றில்லை, கூட்டணி அமைந்தபோதே கையெழுத்திடப்பட்டு ஒரு மாநிலங்களவை இடம் உறுதி செய்யப்பட்டது. மாநிலங்களவை எம்.பி.யை தேர்வு செய்யப்படுவதற்கான நாள் வரும்போது தேமுதிக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்போம்’ என்றார்.