விஜயகாந்துக்கு மணிமண்டபம்: பிரேமலதா கோரிக்கை

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் அருகே பிரேமலதா விஜயகாந்த்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் அருகே பிரேமலதா விஜயகாந்த் ANI
1 min read

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மணிமண்டபத்தை அமைக்க தமிழக அரசிடம் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த வியாழக்கிழமை காலமானார். இவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் இன்று மரியாதை செலுத்தினார்கள்.

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, விஜயகாந்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஜி.கே. வாசன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், தொலைபேசி வாயிலாக இரங்கலைத் தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.

விஜயகாந்துக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து பேசிய பிரேமலதா கூறியதாவது:

"தேமுதிகவினர் அனைவரும் இனி ஒரே கரமாக இணைந்து ஒன்றாக செயல்பட்டு விஜயகாந்தின் லட்சியத்தை வென்றெடுப்பதுதான் எங்கள் அனைவரது லட்சியம். அந்த வெற்றிக்கனியைப் பறித்து நிச்சயமாக விஜயகாந்த் காலடியில் சமர்ப்பிக்கும் நாள்தான் எங்களுக்கான நாள். அதுவே விஜயகாந்துக்கு நாங்கள் செய்யும் பெரிய கடமையாக இருக்கும்.

இதுதவிர பொது இடத்தில் விஜயகாந்துக்கு ஒரு மணிமண்டபத்தை அமைக்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறோம். பொதுவான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு விஜயகாந்தின் சிலையை நிறுவ வேண்டும் எனக் கேட்டிருக்கிறோம். இது கட்சியின் கோரிக்கை மட்டுமல்ல. ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாகத்தான் இதை முன்வைக்கிறோம்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in