

தமிழ்நாட்டில் விஜய் பெரும் அரசியல் சக்தியாக உருவாகிவிட்டார் என்பதை மறுக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் திமுகவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரு தரப்பினர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவராக உள்ள பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயைச் சந்தித்தார். மேலும் மாநிலத்தின் கடன் விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டார். இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கை
இதற்கிடையில் கோவை விமான நிலையத்தில் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. இதனால் அதிக இடங்கள் வேண்டும், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். 60 ஆண்டு காலமாக காங்கிரஸ் பலவீனமாக உள்ளது. இதனைப் பலப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. தமிழ்நாட்டில் காங்கிரஸின் எதிர்காலத்திற்காகவே இந்தக் கோரிக்கை வைக்கப்படுகிறது.
காங்கிரஸ் நலனுக்கு எது தேவை?
தொண்டர்களுக்கு இந்தக் கருத்துதான் இருக்கிறது. பதவியில் இருக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேறு நோக்கம் இருக்கலாம். ஆங்கிலத்தில் உணவு கொடுக்கும் கையைக் கடிக்கக் கூடாது என்ற பழமொழி சொல்வார்கள். ஊட்டிவிடும் கையை யாராவது கிள்ளுவார்களா? ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கலாம். அது தொகுதி அளவில் இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தவும் எதிர்கால நலனுக்காகவும் இந்தக் கோரிக்கை தேவையா என்று கேட்டால், அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.
தனிப்பட்ட முறையில் விஜயைச் சந்தித்தேன்
கூட்டணியைப் பொறுத்தவரை தலைமைதான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் கோரிக்கையை வைக்கலாம். இது ஜனநாயகக் கட்சி, யார் வேண்டுமானாலும் எந்தக் கோரிக்கையும் வைக்கலாம். ஆனால் இறுதி முடிவைத் தலைமைதான் எடுக்கும். நான் திரைத்துறையில் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். ஆனால் விஜயைச் சந்தித்தேன். அதைத் தவிற வேறொன்றும் சொல்ல விரும்பவில்லை. இருவர் சந்தித்தால் தவறா? அவரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்தேன். தில்லியில் நான் இதுபோல் நிறையபேரைச் சந்திக்கிறேன். அங்கெல்லாம் யாரும் கேள்வி கேட்டதே இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இப்படி?
பெரும் அரசியல் சக்தி விஜய்
விஜய்க்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதா என்ற விவகாரத்தில் ஆரூடம் எதுவும் தேவையில்லை. மக்கள் உற்சாகமாக அவரது நிகழ்ச்சிகளுக்கு வருகிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அது வாக்குகளாக மாறுமா என்ற சந்தேகங்கள் இருக்கின்றன. ஆனால், அவரை மக்கள் நடிகராகப் பார்க்கவில்லை அரசியல் தலைவராகத்தான் பார்க்க வருகிறார்கள். அது பெரும் சக்திதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. விஜய் பெரும் அரசியல் சக்தியாக உருவாகிவிட்டார்” என்றார்.
Congress leader Praveen Chakravarthy has said that it cannot be denied that Vijay has emerged as a major political force in Tamil Nadu.