
தவெகவின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சித் தலைவர் விஜயுடன் பங்கேற்றுள்ளார் பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள பாயிண்ட்ஸ் ஷெரட்டனில் இன்று (பிப்.26) காலை 10 மணியளவில் தொடங்கியது.
விழா மேடைக்கு, தவெக தலைவர் விஜய்யுடன் பிரபல அரசியல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர் வருகை தந்தார். தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் உடனிருந்தார்கள்.
இதைத் தொடர்ந்து, # get out என்கிற பெயரில் விழா மேடைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த பதாகையில் கையெழுத்திட்டார் விஜய். அவரை தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அதில் கையெழுத்திட்டார்கள். அந்த பதாகையில்,
`ஒருவர் பாட்டுப் பாட, மற்றொருவர் அதற்கேற்ற ஒத்திசைவுடன் நடனம் ஆட, திரைமறைவு கூட்டுக் களவாணிகள் இருவரும் தமிழக மக்களின் பிரச்னைகளை இருட்டடிப்பு செய்ய, என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்து வருகிறார்கள்.
புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டம் திணிப்போடு சேர்த்துப் பின்வரும் முக்கிய அவலங்களையும் எதிர்த்துப் போராடி இவைகளை # get out செய்திட உறுதியேற்போம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, கிடாக்குடி மாரியம்மாள் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.