தன் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய காணொளி சர்ச்சையான நிலையில், அது குறித்து வருத்தம் தெரிவித்து மருத்துவத்துறைக்குக் கடிதம் எழுதியுள்ளார் யூடியூபர் இர்ஃபான்.
பிரபல யூடியூபர் இர்ஃபான் தன் மனைவி பிரசவிக்கும் காணொளியை தன் யூடியூப் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார். அந்தக் காணொளியில், பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டிய காட்சியும், அதற்கான கத்திரிக்கோலை பிரசவம் பார்த்த மருத்துவர் இர்ஃபானிடம் கொடுத்த காட்சியும் இருந்தன.
இர்ஃபான் வெளியிட்ட இந்த காணொளி சர்ச்சையானது. பிரசவம் நடந்த இடத்தில், கேமராமேனுடன் இர்ஃபானை எப்படி அனுமதிக்கலாம் என சமூக வலைதளங்களில் பலரும் கேள்விகளை எழுப்பினர். அத்துடன் இர்ஃபானுடன், சம்மந்தப்பட்ட மருத்துவர் மீதும், ரெயின்போ மருத்துவமனை நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன், `மருத்துவச் சட்ட விதிகளை மீறிய அந்த நபர் (இர்ஃபான்) மீது நடவடிக்கை எடுக்க செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் டி.எம்.எஸ். சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவர் பயிற்சியைத் தொடர தடை விதிக்கவேண்டும் என தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.
இதனை தொடர்ந்து அக்.23-ல் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை 10 நாள்கள் செயல்படத் தடை விதித்தும், மருத்துவமனை நிர்வாகத்துக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளதும் உத்தரவிட்டது டி.எம்.எஸ்.
இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் இருக்கும் இர்ஃபான் தன் உதவியாளர் மூலம், மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநரிடம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் `எந்த உள்நோக்கத்துடனும் வீடியோவை பதிவு செய்யவில்லை; மருத்துவ சட்டங்களை மதிக்கிறேன்’ என்று எழுதியுள்ளார்.