சென்னை: தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கியது

சென்னையில் 85 வயதுக்கு மேற்பட்டவர்களில் 4,175 பேரும், மாற்றுத்திறனாளிகளில் 363 பேரும் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
சென்னை: தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கியது
ANI

மக்களவைத் தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தபடி வாக்களிப்பதற்கான தபால் வாக்கு சேகரிக்கும் பணி சென்னையில் இன்று தொடங்கியது.

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தபடி வாக்களிப்பதற்கு வசதியாக தபால் வாக்கு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான 12-டி படிவம் கடந்த மாதம் 25-ம் தேதி வரை வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 85 வயதுக்கு மேற்பட்ட 6.08 லட்சம் மூத்த குடிமக்களில் 4.30 லட்சம் பேர் மட்டுமே தபால் வாக்குக்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்றார்கள். இவர்களில் 77,445 பேர் மட்டுமே படிவத்தைப் பூர்த்தி செய்து ஒப்படைத்தார்கள்.

மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்தவரை 4.61 லட்சம் பேரில் 3.65 லட்சம் பேர் மட்டுமே தபால் வாக்குக்கு விண்ணப்பித்திருந்தார்கள். இவர்களில் படிவத்தைப் பூர்த்தி செய்து ஒப்படைத்தவர்கள் 50,676 பேர்.

தபால் வாக்குக்கு 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 7.95 லட்சம் பேர் விண்ணப்பப் படிவத்தைப் பெற்ற நிலையில், மொத்தம் 1.28 லட்சம் பேர் மட்டுமே படிவத்தை நிரப்பி ஒப்படைத்தார்கள்.

விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்தவர்களிடம் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னையில் தபால் வாக்குகளை சேகரிக்கும் இன்று தொடங்கியது. சென்னை மாவட்டத்தில் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகள் வருகின்றன. இந்தத் தொகுதிகளில் தபால் வாக்குக்கு விண்ணப்பித்திருந்தவர்களிடம் வாக்குகளை சேகரிக்கும் பணிக்காக மொத்தம் 67 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் 85 வயதுக்கு மேற்பட்டவர்களில் 4,175 பேரும், மாற்றுத்திறனாளிகளில் 363 பேரும் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து படிவத்தை நிரப்பி சமர்ப்பித்துள்ளார்கள். இவர்களிடமிருந்து வாக்குகளை சேகரிப்பதற்கான குழு வீடுவீடாகச் சென்று வாக்குகளைச் சேகரிக்கவுள்ளார்கள்.

தபால் வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் சேகரிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இந்தப் பணி ஏபர்ல் 13 வரை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in