பூந்தமல்லி புறவழிச்சாலை - போரூர் உயர்மட்ட வழித்தடப் பணிகள் நிறைவு: சென்னை மெட்ரோ நிர்வாகம்

128 மெட்ரோ நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
பூந்தமல்லி புறவழிச்சாலை - போரூர் உயர்மட்ட வழித்தடப் பணிகள் நிறைவு: சென்னை மெட்ரோ நிர்வாகம்
1 min read

பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான உயர்மட்ட வழித்தடம் அமைக்கும் பணிகள் இன்று (மார்ச் 8) நிறைவுபெற்றதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட திட்டப் பணிகள், மாதவரம் - சிறுசேரி வரையிலான 3-வது வழித்தடம் (45.4 கி.மீ.), கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.), மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடம் (44.6 கி.மீ.) என 3 புதிய வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன.

இதில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடத்தில் உள்ள பூந்தமல்லி - போரூர் சந்திப்பு இடையிலான மெட்ரோ சேவை நடப்பாண்டின் டிசம்பர் மாதத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று (மார்ச் 8) வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது, 

`சென்னை மெட்ரோ இரயில் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் 118.9 கி.மீ. நீளத்திற்கு மூன்று வழித்தடங்களில் 128 மெட்ரோ நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் போரூர் சந்திப்புக்கு இடையிலான 624-வது மற்றும் இறுதி யு-கர்டரின் கட்டுமானப் பணிகள் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தன. இதன் மூலம் வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான உயர்மட்ட வழித்தடம் அமைக்கும் பணிகள் இன்று அதிகாலையில் முடிவடைந்தன.

இந்த முக்கியமான நிகழ்வு சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்திருந்ததால் மேலும் சிறப்பாக அமைந்தது. இத்திட்டத்தின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றிய பல்வேறு பெண் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் கவுரவிக்கப்பட்டார்கள். அவர்களின் அர்ப்பணிப்புக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்த சாதனையின் மூலம், தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் இதுவரை மொத்தம் 3202 முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கான்கிரீட் உத்திரங்கள் (precast concrete elements), 2 திறந்த வலை உத்திரங்கள் (Open Web Girders), மற்றும் 164 இரும்பு விட்டங்கள் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளன.

இந்த மைல்கல், பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை தடையற்ற இணைப்பை மேம்படுத்தும் வகையில், வழித்தடம் 4-ல் உயர்த்தப்பட்ட மேம்பால கட்டுமானத்தை வேகமாக நிறைவு செய்யும் நடவடிக்கையை ஊக்குவிக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in