தில்லி சிபிஐ காவல் கண்காணிப்பாளரால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
பொன். மாணிக்கவேல் பதவியில் இருந்தபோது தன்னைப் பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்குப் பதிவு செய்தார், எனவே அவருக்கு எதிராக சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் காதர் பாட்ஷா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் பொன். மாணிக்கவேல் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இதை அடுத்து 2022-ல் பொன். மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரணையைத் தொடங்கியது சிபிஐ. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் 11-ல் சென்னை பாலவாக்கத்தில் உள்ள பொன். மாணிக்கவேல் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சிபிஐ பதிந்துள்ள வழக்கில் தனக்கு முன்ஜாமின் சென்னை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்தார் பொன். மாணிக்கவேல். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
முன்பு திருடுபோன ஏராளமான ஐம்பொன் சிலைகள், சிலைக் கடத்தல் தடுப்பு ஐ.ஜி.யாக பொன். மாணிக்கவேல் செயல்பட்டபோது மீட்டுள்ளதாகவும், இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் பொன். மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்கவேண்டும் எனவும் வாதிட்டார் அவர் தரப்பு வழக்கறிஞர்.
விசாரணையின் முடிவில் பொன். மாணிக்கவேல் தரப்பின் கோரிக்கை ஏற்கப்பட்டு அவருக்கு முன்ஜாமின் வழங்கியது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. இந்த முன்ஜாமின் உத்தரவில் சென்னை சிபிஐ அலுவலகத்தில் 4 வாரங்கள் நேரில் ஆஜராகி பொன். மாணிக்கவேல் கையெழுத்திட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.