
பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2019-ல் தொடரப்பட்ட பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி இன்று (மே 13) காலை தீர்ப்பு வழங்கினார். இதைத் தொடர்ந்து நண்பகல் 12.30 மணியளவில் தண்டனை விவரம் வாசிக்கப்பட்டது.
குற்றாவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுந்தரமோகன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,
`தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கூட்டுப் பாலியல் வன்கொடுமை மேற்கொண்டதற்காகவும், தொடர்ச்சியாக கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதற்காகவும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 85 லட்சம் இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. சிபிஐ மற்றும் எங்களின் முயற்சி வீண்போகவில்லை. நீதிமன்றம் நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், வழக்கின் தன்மை போன்றவற்றின் அடிப்படையில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொருக்கும் தலா ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சாட்சிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை, மின்னணு ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வாதங்களை முன்வைத்தோம். விசாரணையின்போது சேகரிப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்தோம். அதை நீதிமன்றம் கவனமாகப் பரிசீலித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒவ்வொருவருக்கும் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும்.’ என்றார்.