
பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தங்களை சிலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, காணொளி எடுத்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண்கள், கடந்த 2019-ல் மாவட்ட காவல்துறையில் புகாரளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக முதலில் மாவட்ட காவல்துறை விசாரணை மேற்கொண்டது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோர் 2019-ல் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு 2021-ல் ஹேரேன் பால், பாபு (எ) பைக் பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் முதல் குற்றப்பத்திரிகை 2019 மே 24-ல் தாக்கல் செய்யப்பட்டது. பிறகு, 2021 பிப்ரவரி, செப்டம்பர் மாதங்களில் கூடுதல் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
ஏறத்தாழ கடந்த 6 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் விசாரணை நிறைவடைந்தது. மே 13 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கத்திற்கு மாறாக காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. மகளிர் நீதிமன்றத்தின் நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு விவரங்களை வாசித்து முடித்ததும், அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுந்தரமோகன் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது,
`கைதான 9 பேரும் குற்றவாளிகள் என அரசுத் தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கூட்டு பாலியல் வன்முறை குற்றச்சாட்டு மற்றும் மீண்டும், மீண்டும் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் முன்வைத்த குற்றச்சாட்டுகள் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் ஒருவர்கூட பிறழ்சாட்சியாக மாறவில்லை. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் நண்பகல் 12 மணியளவில் வெளியாகும்.
அரசுத் தரப்பில் அனைவருக்குமே சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்ற உச்சபட்ச தண்டனையைக் கோரியுள்ளோம்’ என்றார்.