

கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவில் பல்வேறு அரசியல் தலைவரும் திரைப் பிரபலங்களும் பங்கேற்று பக்திப் பரவசத்தில் லயித்தனர்.
ஆண்டுதோறும் மகாசிவராத்திரி திருநாளைக் கோவை ஈஷா மையம் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. அன்று இரவு முழுவதும் ஈஷா மைய வளாகத்தின் முகப்பில் உள்ள ஆதியோகி சிலைக்கு முன் பக்தர்கள் குவிந்து சிவராத்திரி தியானத்தில் ஈடுபடுவது வழக்கம். ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் மட்டுமன்றி அரசியல், திரைத்துறை, விளையாட்டு போன்ற துறைகளின் பிரபலங்களும் கலந்து கொள்வதுண்டு. அதன்படி, இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழா நேற்று (பிப். 15) நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
தேவேந்திர பட்னாவிஸ் பங்கேற்பு
இந்த ஆண்டு ஆதியோகி சிலைக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஷ்வர லிங்கத்திற்கு ஈஷா மையத்தின் நிறுவனர் ஜக்கி வசுதேவ் சிறப்பு அபிஷேக ஆராதனைகளைச் செய்தார். இதில், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், அவரது மனைவி அமிர்தா பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எஸ்.பி. வேலுமணி, பிரேமலதா விஜயகாந்த்
அதேபோல், மகாசிவராத்திரி விழாவில் புதுச்சேரியின் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்றார். மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு மாலை அணிவித்து ஜக்கி வாசுதேவ் வரவேற்றார்.
பவ்ய பாரத் பூஷன் விருது
விழாவில் ஈஷா சார்பில் கலை மற்றும் பொழுதுபோக்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, இலக்கியம், நாட்டின் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ‘பவ்ய பாரத் பூஷன்’ விருது வழங்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். விஞ்ஞானி நம்பி நாராயணன், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், வரலாற்றாய்வாளர் விக்ரம் சம்பத் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைச் சிறப்பாக நடத்தியமைக்காக முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் விருது வழங்கப்பட்டது.
நடிகைகள் உற்சாக நடனம்
ஆண்டுதோறும் ஈஷா மையத்தின் மகாசிவராத்திரி விழாவின் ஆன்மிக அனுபவத்தைப் பெற திரைப்பிரபலங்கள் படையெடுப்பதுண்டு. இந்த ஆண்டு நடிகை தமன்னா, நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, நடிகை சாரா அர்ஜுன், பாலிவுட் நடிகை மௌனி ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குறிப்பாக தமன்னா, சாரா அர்ஜுன், ஸ்ரீநிதி ஷெட்டி மூவரும் பக்திப் பரவசத்தில் நடனமாடிய காணொளி தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Various political leaders and film celebrities participated in the Mahashivratri festival held at the Isha Center in Coimbatore and indulged in devotional ecstasy.