சந்தாதாரர் தற்கொலை: நாமினிக்கு ரூ. 93 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவு!

ரூ. 92.84 லட்சத்தை காப்பீட்டு நிறுவனத்திடம் சரண்யா கோரியுள்ளார். ஆனால் விதிகளை மேற்கோள்காட்டி ரூ. 95 ஆயிரம் மட்டுமே தரப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
சந்தாதாரர் தற்கொலை: நாமினிக்கு ரூ. 93 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவு!
1 min read

தற்கொலை செய்துகொண்ட ஆயுள் காப்பீடு சந்தாதாரரின் மனைவிக்கு, முழுமையான காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்து தனியார் காப்பீட்டு நிறுவனம் முன்வைத்த காரணங்களை சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் நிராகரித்து, காப்பீட்டு நிறுவனம் முதலில் வழங்க ஒப்புக்கொண்டதைவிட கிட்டத்தட்ட 100 மடங்கு தொகையை வட்டியுடன் சேர்த்து வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020-ல் கே. குணசேகர் என்ற நபர், தனக்கான 40 வருட ஆயுள் காப்பீட்டை, டாடா ஏஐஏ காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளார். தனது காப்பீட்டிற்கான நாமினியாக மனைவி சரண்யாவை அவர் நியமித்துள்ளார்.

இந்த ஆயுள் காப்பீடு திட்டத்தின்படி, குணசேகர் உயிரிழந்தால் அவரது மனைவிக்கு உடனடியாக ரூ. 50 லட்சமும், மாதம் ரூ. 50 ஆயிரமும் (120 மாதங்களுக்கு) காப்பீட்டு நிறுவனம் வழங்கவேண்டும். 2023 வரை பிரீமியம் செலுத்திய குணசேகர் நிதி நெருக்கடி காரணமாக 2024-ல் தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து, நாமினி என்ற வகையில் ரூ. 92.84 லட்சத்தை காப்பீட்டு நிறுவனத்திடம் சரண்யா கோரியுள்ளார். ஆனால் விதிகளை மேற்கோள்காட்டி ரூ. 95 ஆயிரம் மட்டுமே தரப்படும் என்று காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில் அவருக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டிற்கு பதிவு செய்து அல்லது காப்பீட்டை புதுப்பித்த 12 மாதங்களுக்குள்ளாக சந்தாதாரரின் மரணம் ஏற்பட்டுவிட்டால், செலுத்தப்பட்ட பிரீமியம்களின் அடிப்படையில்தான் காப்பீட்டுப் பணம் வழங்கப்படும் என்ற விதி உள்ளதாக நிறுவனத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரீமியம்களை தாமதமாக வட்டியுடன்தான் குணசேகர் செலுத்தினார் என்றும் விளக்கமளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, காப்பீட்டு நிறுவனத்தை எதிர்த்து தீர்ப்பாயத்தில் சரண்யா வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் விசாரணையின்போது நிறுவனத்தின் சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் சமர்பிக்கப்படவில்லை, அத்துடன் நிறுவனத்தின் பிரதிநிதிகள் யாரும் ஆஜராகி விளக்கமளிக்கவும் இல்லை.

இந்நிலையில், தாமதமாக பிரீமியம் செலுத்தியிருந்தாலும் 2023 வரை பிரீமியங்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், தாமதமாக செலுத்தியதை காப்பீட்டு தொகையை மறுப்பதற்கான முகாந்திரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தீர்ப்பாயத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் ராமமூர்த்தி, கவிதா கண்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, ரூ. 92.84 லட்சத்தை சரண்யாவுக்கு வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், அத்துடன் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ. 25 ஆயிரத்தையும், வழக்கு செலவுக்காக ரூ. 5 ஆயிரத்தையும் கூடுதலாக வழங்கவும் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in