
திருப்பரங்குன்றம் மலை மீது ஏறிச் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையைச் சுற்றி 800-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோயிலின் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்கா ஆகிய வழிபாட்டிடங்கள் உள்ளன. இந்நிலையில், சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட இஸ்லாமிய அமைப்புகள் முயற்சி செய்தன. இதற்கு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பலர் மீது காவல்துறையினர் வழக்கு தொடர்ந்தார்கள்.
இந்நிலையில், `திருப்பரங்குன்றம் மலையைக் காப்போம்’ என்கிற கோஷத்துடன் இன்று (பிப்.4) இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன.
இந்து முன்னணியின் போராட்டத்திற்குக் காவல்துறை அனுமதி மறுத்து, இன்று (பிப்.4) ஒரு நாள் மட்டும் மலை மீது ஏறிச் செல்லத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. குறிப்பாக, மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்காவிற்குச் செல்வதற்கு தடை விதிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி இன்று 800-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் திருப்பரங்குன்றத்தில் அசாதாரண சூழல் நிலவுவதை அடுத்து இன்று நள்ளிரவு 12 மணி வரை மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் ஆட்சியர் சங்கீதா.
இதனை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூரில் வைத்து இன்று (பிப்.4) காலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்.