பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவந்த ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் இரவோடு இரவாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களின் போராட்டப் பந்தல்கள் அகற்றப்பட்டுள்ளன.
இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து சுங்குவார்சத்திரத்தில் இன்று (அக்.9) காலை மீண்டும் போராட்ட களத்துக்கு வந்த சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்து உள்ள சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த செப்.9 தொடங்கி இந்நிறுவனத்தின் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சாம்சங் தொழிற்சாலை நிர்வாகம், தொழில்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அமைச்சர்கள் ஆகியோருடன் போராட்டம் நடத்திவரும் ஊழியர்களின் பிரதிநிதிகள் பலகட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இவற்றில் உடன்பாடு எட்டப்படாததால் ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்க வேண்டி 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைச் சுமந்து வந்த சரக்கு வாகனம் நேற்று (அக்.08) தொழிற்சாலைக்கு அருகே உள்ள சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து விபத்து நடந்த இடத்துக்கு வந்த காவல்துறையினருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.
அப்போது உதவி காவல் ஆய்வாளரை தொழிலாளர்கள் கீழே தள்ளியதாகப் புகார் எழுந்தது. இதனை அடுத்து, இது தொடர்பாக 7 தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தது காவல்துறை. பிறகு அவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்த தொழிலாளர்களின் பிரதிநிதிகள் 10 பேரை இரவோடு இரவாக கைது செய்து ரகசிய இடத்துக்குக் காவல்துறை கொண்டுசென்றுள்ளதாகவும், போராட்டப் பந்தலை காவல்துறை பிரித்ததாகவும் குற்றச்சாட்டை எழுப்பினர் தொழிலாளர்கள்.
இதனைத் தொடர்ந்து இன்று (அக்.09) காலை போராட்ட களத்துக்கு வந்த சாம்சங் தொழிலாளர்கள், காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.