இன்று (செப்.07) பிற்பகல் 2 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் வைத்து சர்ச்சைக்குரிய வகையில் பிற்போக்குத்தனமாகப் பேசிய சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவைக் கைது செய்து விசாரணைக்குக் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
இன்று காலை ஆஸ்திரேலியாவில் இருந்து கிளம்பி சென்னை விமான நிலையத்துக்குப் பிற்பகலில் வந்த மகாவிஷ்ணுவிடம் சைதாப்பேட்டை உதவி காவல் ஆணையர் சீனிவாசன் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பிறகு அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
மேலும் மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல், ரகசிய இடத்தில் வைத்து சைதாப்பேட்டை காவல்துறையினர் விசாரிக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இன்று பிற்பகல் சென்னை விமான நிலையத்துக்கு மகாவிஷ்ணு வரவிருக்கும் தகவல் வெளியானதை அடுத்து அவரைக் காண அவரது ஆதரவாளர்கள் பலரும் காலை முதலே அங்கே குழுமியிருந்தனர். ஆனால் விமானநிலையத்துக்குள் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவைப் பொதுவான வெளியேறும் வாயில் வழியாக அழைத்து வராமல், வேறு வழியில் அழைத்துச் சென்று விமான நிலையத்தில் இருந்து வெளியேறியது காவல்துறை.
சைதாப்பேட்டை மாதிரி அரசுப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பிற்போக்குத்தனமாகப் பேசிய மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று (செப்.06) மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.