
திருப்புவனம் காவல் நிலையத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் தம்பிக்கு ஆவின் நிறுவனத்தில் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் காளி கோயிலில் பணிபுரிந்த காவலாளி அஜித்குமாரை, சந்தேகத்தின்பேரில் கடந்த ஜூன் 28 அன்று விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது காவல்துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, அஜித்குமாரின் காவல் மரண விவகாரம் குறித்த செய்தி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பிறகு இதில் தொடர்புடைய 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் அதில் 5 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதன் மீதான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, காவல் மரணம் குறித்த விரிவான விசாரணையை மேற்கொள்ள மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷுக்கு உத்தரவிட்டது.
நேற்று (ஜூலை 1) மாலை அஜித்குமாரின் குடும்பத்தினருடன் கைபேசியில் உரையாடிய முதல்வர் ஸ்டாலின், அவர்களிடம் வருத்தம் தெரிவித்தார். மேலும், அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்று உறுதியளித்தார். அதன்பிறகு, மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், அஜித்குமாரின் இல்லத்திற்கு இன்று (ஜூலை 2) காலை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனும், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடியும் சென்றனர்.
அப்போது, அஜித்குமாரின் தம்பிக்கு ஆவின் நிறுவனத்தில் ரூ. 30 ஆயிரம் ஊதியத்தில் டெக்னீஷியன் பணிக்கான நியமன ஆணையையும், அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டாவையும் அமைச்சர் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், திமுக சார்பில் முதற்கட்டமாக ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளதாகவும், மேற்கொண்டு உதவிகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.