
திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த ஜூன் 28 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் காவல் துறையினரின் தாக்குதலால் உயிரிழந்தார். இதுதொடர்பாக 6 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அஜித்குமார் மரணத்தைத் தொடர்ந்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் அவருடைய குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இவர் மூலம் அஜித்குமார் குடும்பத்தினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகப் பேசினார்.
முதல்வர் பேசிய அடுத்த நாள் அஜித்குமார் சகோதரர் நவீன் குமாருக்கு ஆவின் நிறுவனத்தில் ரூ. 30 ஆயிரம் ஊதியத்துக்கான அரசுப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்நிலையில், அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து தெரியாமல் இருந்தது.
நவீன்குமாருடன் மருத்துவமனைக்குச் சென்ற அவருடைய தாய்மாமா பாலமுருகன் புதிய தலைமுறை செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ளார். "நவீன்குமாரின் கை, கால்களிலும் அடித்துள்ளார்கள். கையில் பெரிய தாக்கம் எதுவும் இல்லை. கால்களில் மட்டும் இரு கால்களையும் ஊன்ற முடியவில்லை எனச் சொல்லிக்கொண்டிருந்தார். நேற்று வரலாம் என நினைத்தபோது, தாமதமாகிவிட்டது. இன்றும் கால்கள் வலிப்பதாக அழைத்திருந்தார். அதனால் தான் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளேன். ஸ்கேன், ரத்தப் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. முடிவு இன்னும் வரவில்லை" என்றார்.