
சுவாமி ஐயப்பனை இழிவாகப் பாடிய இசைவாணி மீதும், இயக்குனர் பா. இரஞ்சித் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் கலாச்சார மையம் சார்பாக டிசம்பர் மாதத்தில் `மார்கழியில் மக்களிசை’ என்கிற இசை நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்படுகிறது. கடந்த 2023-ல் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்கிற இசை குழுவினர் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அப்போது, கேஸ்ட்லெஸ் கலெக்டிவைச் சேர்ந்த கானா பாடகி இசைவாணி `ஐ அம் சாரி ஐயப்பா’ என்கிற பாடலைப் பாடினார். அந்தப் பாடலின் தொடக்க வரிகள் பின்வருமாறு,
`ஐ எம் சாரி ஐயப்பா நான் உள்ள வந்தால் என்னப்பா, பயம் காட்டி அடக்கி வைக்க பழைய காலம் இல்லப்பா, நான் தாடிக்காரன் பேத்தி இப்போ காலம் மாறிப்போச்சு, நீ தள்ளி வச்சா தீட்டா நான் முன்னேறுவேன் மாஸா…..’’
இந்தப் பாடலை வேறு சில நிகழ்ச்சிகளிலும் இசைவாணி பாடியதாக கூறப்படுகிறது. சுவாமி ஐயப்பன் குறித்து இசைவாணி பாடிய இந்தப் பாடலின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் பாடலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுவாமி ஐயப்பனை இழிவாகப் பாடிய கானா பாடகி இசைவாணி மீதும், நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனரான இயக்குனர் பா. இரஞ்சித் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல் நிலையத்தில் தமிழக சிவசேனா கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.