
நீலாங்கரையில் உள்ள விஜய் வீ்ட்டிற்குள் நுழைந்து பதுங்கி இருந்த இளைஞரைக் காவல்துறையினர் மனநல காப்பகத்தில் சேர்த்ததாகத் தெரிவித்துள்ளனர்.
சென்னை நீலாங்கரை கேசினோ டிரைவ் பகுதியில் தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் வீடு உள்ளது. அண்மையில் அவர் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அவருக்கு மத்திய அரசின் ஒய் ரக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎஃப் பாதுகாப்பு படையினர் அவரது வீட்டில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று (செப்.18) இளைஞர் ஒருவர் விஜய்யின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
யாருக்கும் தெரியாமல் நுழைந்த அவர், விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கி இருந்துள்ளார். இதையடுத்து, மொட்டை மாடிக்குச் சென்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள், இளைஞர் இருந்ததைக் கவனித்துள்ளார்கள். உடனே அவரைப் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், மொட்டை மாடிக்கு நடை பயிற்சிக்குச் சென்ற விஜய் இளைஞர் இருந்ததைப் பார்த்துப் பாதுகாப்பு அலுவலர்களிடம் ஒப்படைத்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிடிபட்ட இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் மதுராந்தகத்தைச் சேர்ந்த அருண் (24) என்பதும் அவர் 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. வேளச்சேரியில் அவர் வசித்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில், நீலாங்கரை காவல்துறையினர் அவரைக் கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சேர்த்தனர். மேலும், ஒய் பிரிவு பாதுகாப்பைக் கடந்து அவர் எப்படி உள்ளே நுழைந்தார் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
நாளை (செப்.20) தவெக சார்பில் விஜய் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள நிலையில் இச்சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.