நீலகிரியில் பாஜகவினர் மீது தடியடி?

காவல் துறையினரின் நடவடிக்கையால் கோபமடைந்த எல். முருகன், அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
நீலகிரியில் பாஜகவினர் மீது தடியடி?
படம்: https://twitter.com/Murugan_MoS

நீலகிரியில் பாஜகவினர் ஊர்வலத்தில் காவல் துறையினர் தடியடி நடத்தியதாகக் கூறப்பட்ட நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அண்ணாமலையும், எல். முருகனும் நேரில் சென்று நலம் விசாரித்தார்கள்.

நீலகிரியில் திமுக சார்பில் ஆ. ராசா, பாஜக சார்பில் எல். முருகன், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதில் எல். முருகன் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மாவட்ட ஆட்சியரிடம் காலை 10 முதல் 11 மணி வரை அனுமதி கோரியிருந்ததாகவும், லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக காலை 11 மணி முதல் 12 வரை அனுமதி கோரியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் பாஜகவினர் ஊர்வலம் நடத்தி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அதிமுகவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதனால், காவல் துறையினர் பாஜகவின் ஊர்வலத்தைக் கலைத்தார்கள். அப்போது தடியடி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

காவல் துறையினரின் நடவடிக்கையால் கோபமடைந்த எல். முருகன், அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். காவல் கண்காணிப்பாளர் பாஜகவினரைத் தொடர்புகொண்டு சமாதானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன்பிறகு, எல். முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலைத் தொடர்ந்து, காவல் துறையினரின் தடியடியில் காயமடைந்து உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொண்டர்களை அண்ணாமலையும், எல். முருகனும் நேரில் சென்று நலம் விசாரித்தார்கள்.

இந்த சம்பவம் குறித்து பாஜக எம்எல்ஏவும், மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"இன்று நீலகிரி மாவட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட தொண்டர்களின் ஆரவாரத்தை கண்டு திமுக காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்பொழுது தொண்டர்கள் கலைந்து செல்ல முற்படாததால் தொண்டர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் பாஜக தொண்டர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளருக்கும் தொடர்களுக்கும் பாதுகாப்பு கொடுப்பதை விட அராஜக முறையை கையில் எடுத்துள்ள காவல்துறையினரை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதோடு மட்டுமில்லாமல் திமுகவின் ஏவல் துறையாக செயல்படும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய இணை அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத மாநிலத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது தெளிவாக காட்டுகிறது. காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், இந்த அடக்குமுறைக்கு என்ன பதில் கூற போகிறார்..?

மத்திய இணை அமைச்சருக்கு பாதுகாப்பு இல்லை... தமிழக பாஜக தலைவருக்கு பாதுகாப்பு இல்லை... தொண்டர்களுக்கு(மக்களுக்கு) பாதுகாப்பு இல்லை... ஆனால் தமிழக முதல்வர் பொறுத்தவரையில் தமிழகம் ஒரு அமைதி பூங்கா..!" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in