
போராட்டப் பந்தல்களை அகற்றிய பிறகும் சுங்குவார் சத்திரத்தில் கூடி மீண்டும் போராட்டம் நடத்திவந்த சாம்சங் ஊழியர்களைக் கைது செய்துள்ளது காவல்துறை.
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலமாக ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார் சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம் நடத்திவந்தனர். இந்நிலையில் நேற்று இரவு போராட்டப் பந்தல் காவல்துறையினரால் அகற்றப்பட்டு, போராட்டம் நடத்திவந்த ஊழியர்கள் பிரதிநிதிகள் சிலரும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் போக்கைக் கண்டித்து 300-க்கும் மேற்பட்ட சாம்சங் ஊழியர்கள் இன்று (அக்.09) காலை மீண்டும் போராட்டக் களத்துக்கு வந்து திறந்தவெளியில் போராட்டத்தை மேற்கொண்டனர். அதன் பிறகு போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் காவல்துறையினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததை அடுத்து கொட்டும் மழையிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் ஊழியர்கள். இதனை அடுத்து போராடிய சாம்சங் ஊழியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
காவல்துறையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்ட சாம்சங் ஊழியர்களின் பிரதிநிதிகள் நிலை குறித்து அறிய சென்னை உயர் நீதிமன்றத்தில் சிஐடியூ அமைப்பு ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணையை இன்று பிற்பகல் நடத்துகிறது உயர் நீதிமன்றம்.