முதுபெரும் கவிஞர் தணிகைச்செல்வன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தணிகைச்செல்வன் மார்க்சிய சிந்தனையைக் கொண்டவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தை நிறுவிய முன்னோடிகளில் இவரும் ஒருவர். 90 வயது தணிகைச்செல்வன் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார்.
இவருடைய மறைவுக்கு முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
"முதுபெரும் கவிஞர் தணிகைச்செல்வன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
அவரது கவிதைத் தொகுதியை 2001-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட்டு உரையாற்றியபோது, பாரதியாருடைய வேகமும் பாரதிதாசனுடைய சொல்வளமும் கொண்டதுதான் தணிகைச்செல்வன் கவிதை என்று சொன்னால் அது மிகையாகாது என்று பாராட்டினார்.
அத்தகையப் பெருமையும், புகழும் பெற்ற கவிஞர் தணிகைச்செல்வனின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர். நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கவிஞர் தணிகைச்செல்வன், தமது கவிதைகள் மூலம் தமிழர்களின் நெஞ்சில் என்றென்றும் நீங்காது நிலைத்திருப்பார்!" என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.