
சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது கோவை மாவட்டத்தில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
37 வயதான பிரபல கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ், கோவை நகரின் கிராஸ் கட் சாலையில் உள்ள கிங் ஜெனரேஷன் பிரேயர் ஹாலின் பாஸ்டராக உள்ளார். இந்நிலையில், கோவையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கடந்தாண்டு இரு சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் (மத்திய) ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. குறிப்பாக, போக்சோ சட்டப் பிரிவுகள் 9(l)(m) மற்றும் 10 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜைக் கைது செய்ய காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு 21 மே 2024 அன்று கோவை ஜி.என். மில்ஸ் பகுதியில் உள்ள ஜான் ஜெபராஜின் இல்லத்தில் விருந்து நடைபெற்றுள்ளது. தனது வளர்ப்பு மகள் மற்றும் அவளது தோழியுடன் ஜான் ஜெபராஜின் மாமா இந்த விருந்தில் கலந்துகொண்டார். இதில் வைத்து, இரு சிறுமிகளிடமும் ஜான் ஜெபராஜ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 11 மாதங்களாக இந்த அத்துமீறல் சம்பவம் வெளிச்சத்திற்கு வரவில்லை. இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் குடும்பத்தினரின் மூலம் இது தொடர்பாக அண்மையில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.