
அன்புமணி மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு செப்டம்பர் 10-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கெடு விதித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவுகிறது. கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இரு தரப்பும் முயன்று வருகின்றன. குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன் அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் 2026 வரை பாமக தலைவராக அன்புமணி தொடர்வார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து ஆகஸ்ட் 17-ம் தேதி இதை எதிர்த்து ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில், அன்புமணி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் கருத்துக்கு எதிராக நடந்துகொண்டது, சமூக ஊடகங்களில் ராமதாஸ் குறித்து அவதூறு பரப்பியது, ராமதாஸ் இருக்கைக்குக் கீழ் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது, ராமதாஸை கேட்காமல் “உரிமை மீட்க தலைமை காக்க” என்ற நடைபயணத்தை நடத்தியது, ராமதாஸின் எச்சரிக்கையை மீறி அவரது புகைப்படங்களைப் பயன்படுத்தியது என்பது உட்பட 16 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. மேலும், அதற்கான நோட்டீஸ் அன்புமணிக்கு அனுப்பப்பட்டு, ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அன்புமணி இதுவரை அதற்குப் பதிலளிக்கவில்லை.
இந்நிலையில், இன்று ராமதாஸ் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “வரும் செப்டம்பர் 10-ம் தேதிக்குள் அன்புமணி தன் மீது சுமத்தப்பட்டுள்ள 16 குற்றச்சாட்டுகளுக்கு முறையான பதிலளிக்க வேண்டும் என்றும், மீறினால் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் பதிலளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
Anbumani Ramadoss | Ramadoss | PMK | Paatali Makkal Katchi | Disciplinary Action Committee | PMK Second show-cause notice | TN Politics