
பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஜி.கே. மணிக்குப் பதிலாக வெங்கடேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாமக சார்பில் 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வானார்கள். இவர்கள் ஜி.கே. மணி மற்றும் அருள் ராமதாஸ் தரப்பில் உள்ளார்கள். மீதமுள்ள மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்புமணி தரப்பில் உள்ளார்கள்.
இந்நிலையில், பாமக சார்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே. பாலு சட்டப்பேரவைச் செயலரை நேரில் சந்தித்து இரு கடிதங்களை அளித்தார். ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் அவர் தலைமைச் செயலகம் சென்றிருந்தார். சட்டப்பேரவைச் செயலர் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் தனிச் செயலரிடம் கடிதத்தை அளித்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே. பாலு, சந்திப்பு குறித்து விளக்கமளித்தார்.
அவர் கூறியதாவது:
"சட்டப்பேரவைச் செயலர் மற்றும் சட்டப்பேரவைத் தலைவரின் தனிச் செயலரிடம் இரு கடிதங்களைக் கொடுத்துள்ளோம். பாமக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் பனையூரிலுள்ள அலுவலகத்தில் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவராகச் செயல்பட்டு வந்த ஜி.கே. மணியை விடுவித்து, பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
சட்டப்பேரவைக் குழு துணைத் தலைவராக மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் கொறடாவாக முன்பு மயிலம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவகுமார் தேர்வு செய்யப்பட்டார். அது உறுதி செய்யப்பட்டது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் முடிந்த பிறகு, பாமகவின் அரசியல் தலைமைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. இதற்கு தலைமைக் குழு ஒப்புதல் அளித்தது. இதன் கடிதத்தை சட்டப்பேரவைச் செயலரிடம் கொடுத்துள்ளோம்.
இதோடு மற்றொரு கடிதத்தையும் நாங்கள் கொடுத்துள்ளோம். கடந்த ஜூலை 3 அன்று பாமகவின் விதிகளுக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய வகையில் செயல்பட்ட சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதை சட்டப்பேரவைச் செயலரிடம் தெரிவித்து, அவரைக் கொறடா பொறுப்பிலிருந்து நீக்கி மயிலம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவகுமாரை சட்டப்பேரவை கொறடாவாகத் தேர்வு செய்துள்ள கடிதத்தை கடந்த ஜூலையில் கொடுத்தோம். அந்தக் கடிதம் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எங்களுக்குச் சட்டப்பேரவைச் செயலகத்திலிருந்து தெரிவிக்கப்படவில்லை. எனவே, அதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கடிதம் அளித்துள்ளதன்படி, வரும் 14 அன்று தொடங்கக்கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் வெங்கடேசனுக்கு இருக்கை ஒதுக்கப்பட வேண்டும்" என்றார் கே. பாலு.
PMK | Anbumani | Ramadoss | K Balu | GK Mani |