பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள்: ஒப்பந்தம் கையெழுத்து

"தமிழ்நாட்டில் மாற்றம் வர வேண்டும் என்பதற்காகவே இந்தக் கூட்டணி" - அன்புமணி ராமதாஸ்
பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள்: ஒப்பந்தம் கையெழுத்து
படம்:https://twitter.com/annamalai_k

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட முடிவு செய்துள்ள பாமகவுக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்புடைய ஒப்பந்தத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளார்கள்.

பாமக, அதிமுக கூட்டணியில் இணைகிறதா, பாஜக கூட்டத்தில் இணைகிறதா என்பது உறுதியாகாமல் இருந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக உயர்நிலைக் கூட்டம் நேற்று கூடியது. மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என உயர்நிலைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. தமிழக பாஜகவும் இதை உறுதி செய்தது.

இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் தைலாபுரம் சென்று பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரைச் சந்தித்து கூட்டணி ஒப்பந்தத்தை மேற்கொண்டார்கள். பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன்பிறகு, அண்ணாமலை மற்றும் அன்புமணி ராமதாஸ் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.

அன்புமணி கூறியதாவது:

"தமிழ்நாட்டில் மாற்றங்கள் வர வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவுக்குப் பிறகு 60 ஆண்டுகாலமாக தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருப்பவர்கள், அவர்கள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பான சூழல் உள்ளது.

மக்களுக்கு ஒரு மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக உள்ளது. அதைப் பூர்த்தி செய்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் மிகப் பெரிய வெற்றி பெறும். பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்" என்றார் அன்புமணி ராமதாஸ்.

இவரைத் தொடர்ந்து அண்ணாமலை பேசியதாவது:

"இந்தக் கூட்டணி ஒரு வலிமையான கூட்டணி. 60 ஆண்டுகளாக தமிழக மக்களின் வெறுப்பை மட்டும் சம்பாதித்திருக்கக்கூடிய கட்சிகளுக்கு மாற்றாக நம்முடைய வலிமையான கூட்டணி 2024-ல் மக்களை நம்பி, மக்கள் இந்த வலிமையான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்கிற முழு நம்பிக்கையுடன் களமிறங்கியிருக்கிறோம்.

தமிழகத்துடைய அரசியல் நேற்றிரவு முதல் மாறியிருக்கிறது. பாமக நேற்றிரவு எடுத்த முடிவு தமிழக அரசியலை முற்றிலுமாக மாற்றியிருக்கிறது. நிச்சயமாக 2024-ல் மாபெரும் வெற்றி, 2026-ல் தமிழகத்தில் நாம் அனைவரும் நினைக்கக்கூடிய அரசியல் மாற்றம் நிகழும்.

ஒரே மேடையில் பிரதமர் நரேந்திர மோடியோடு ராமதாஸை அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்பதற்காக இரவோடு இரவாக கோவையிலிருந்து வந்துள்ளோம். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் தங்களுடைய சகோதரர்களோடு சேலத்தில் நடைபெறவுள்ள பாஜகவின் பிரதமர் பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் பங்கேற்க இசைவு தெரிவித்திருக்கிறார்கள்" என்றார் அண்ணாமலை.

சேலத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பாஜக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in