

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
தமிழ்நாட்டின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, தம்பிதுரை, ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2 அன்று நிறைவடைகிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுடன் சேர்ந்து, நாடு முழுவதிலும் 31 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு வரும் மார்ச் 16 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்
இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 5 வரை நடைபெற்ற நிலையில், திமுக தரப்பில் திருச்சி சிவா, கான்ஸ்டான்டைன் ரவீந்திரன் ஆகியோரும், திமுக கூட்டணியான காங்கிரஸ் தரப்பில் கிறிஸ்டோபர் மாணிக்கமும், தேமுதிக தரப்பில் எல்.கே.சுதீசும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதேபோல், அதிமுக தரப்பில் தம்பிதுரையும், அதிமுக. கூட்டணி கட்சியான பாமக தரப்பில் அன்புமணியும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
6 பேரும் போட்டியின்றி தேர்வு
இந்த நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, இன்று மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். திமுக வேட்பாளர்கள் 4 பேர், அதிமுக வேட்பாளர்கள் 2 பேர் என 6 பேரைத் தவிர வேறு யாரும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடாததால், மேற்கண்ட 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
அதிமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி
அதன்பிறகு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி கூறியதாவது:- “பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இந்த வெற்றிக்காக எங்கள் கூட்டணியின் தலைவர் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும், அனைத்து கூட்டணி கட்சியின் தலைவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளும், என் உயிரினும் மேலான அன்பு தொண்டர்களுக்கு இந்த நேரத்திலே என்னுடைய நன்றிகளை தெரிவிக்கின்றேன். நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். களத்தில் திமுக மீது மக்கள் மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றார்கள். அனைத்து தரப்பு மக்கள், பெண்கள், பெற்றோர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், அனைத்து தரப்பு அரசு ஊழியர்களும், ஆசிரியர்கள் என அனைவரும் கோபத்தில் இருக்கின்றார்கள். திமுக ஏமாற்றி ஏமாற்றி விட்டது என்று. அந்த வகையிலே எங்கள் கூட்டணி மிகப்பெரிய ஒரு வெற்றி பெறும். குறைந்தது 200 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம். அதிமுக தலைமையிலான ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் அமையும். கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேர இருக்கின்றார்கள். அதை எங்கள் கூட்டணியின் தலைவர் அறிவிப்பார்” என்றார்.
PMK leader Anbumani, who has been elected as a member of the Rajya Sabha, said that the AIADMK alliance will win 200 seats in the assembly elections.