
பாமக நிறுவனர் ராமதாஸ் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய உடல்நிலை குறித்து அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. ராமதாஸ் தரப்பில் சிலரும் அன்புமணி தரப்பில் சிலரும் என கட்சியானது இரு தரப்புகளாக இருந்து செயல்பட்டு வருகிறது. எனினும், அன்புமணி தரப்பையே தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக பாமக செய்தித் தொடர்பாளர் கே. பாலு விளக்கம் கொடுத்துள்ளார்.
இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது.
பாமக தலைவரும் ராமதாஸின் மகனுமான அன்புமணி ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) காலை அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்றார். மருத்துவமனை வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி, ராமதாஸுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கினார்.
அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:
"மருத்துவர் ஐயா (ராமதாஸ்) நேற்று மாலை சென்னை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவருக்கு கார்டியோ ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. அந்த ஆஞ்சியோகிராமில், இருதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் நன்றாக உள்ளன, பயப்படுவதற்கு ஏதும் இல்லை, ஐயாவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று இருதய மருத்துவ நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
மேலும் 2 நாள்கள் மருத்துவமனையில் அவர் ஓய்வெடுக்க வேண்டும். பரிந்துரைக்கும் மாத்திரைகளைத் தொடர்ந்து எடுக்க வேண்டும், மற்றபடி பயப்படுவதற்கு ஏதுமில்லை என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அவர் ஐசியூவில் இருக்கிறார். எனவே அவரைப் பார்க்க முடியவில்லை. 6 மணி நேரம் ஐசியூவில் இருப்பார். அதன்பிறகு அறைக்கு வந்துவிடுவார். மருத்துவர்களிடம் நான் பேசினேன். இன்னும் இரு நாள்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும்" என்றார் அன்புமணி.
Ramadoss | Anbumani Ramadoss | PMK | Apollo Hospital | Angiogram |