

ஜி.கே. மணியைக் கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைமை அறிவித்துள்ளது.
பாமக நீண்ட காலமாக ராமதாஸ் தரப்பு மற்றும் அன்புமணி தரப்பு என இரு தரப்பாகச் செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் அன்புமணி தரப்புக்கு உள்ளது. தந்தை - மகன் இடையிலானப் பிரச்னையில் ஜி.கே. மணி பலமுறை சமரசம் செய்ய முயற்சித்தார்.
ஒரு கட்டத்துக்குப் பிறகு ராமதாஸ் தரப்பு ஆதரவாளராக ஜி.கே. மணி செயல்பட்டு வந்தார். இருந்தபோதிலும், தந்தை - மகன் இணைந்து செயல்பட்டால், கட்சியிலிருந்து கூட தான் தயாராக இருப்பதாக ஜி.கே. மணி அண்மையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தான் ஜி.கே. மணியைக் கட்சியிலிருந்து நீக்கி பாமக உத்தரவிட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் தரப்பு பாமக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பாமகவில் நீண்ட காலமாக தலைவராக நீடித்தவர் ஜி.கே. மணி.
இதுதொடர்புடைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாமகவைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி தொடர்ந்து பாமக நலனுக்கும் கட்சித் தலைமைக்கும் எதிராகச் செயல்பட்டு வருவதால், அதற்காக கட்சியின் அமைப்பு விதி 30-இன்படி அடிப்படை உறுப்பினர்களில் இருந்து அவரை ஏன் நீக்கக் கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு பாமகவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் கடந்த டிசம்பர் 18 அன்று அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
அவருக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜி.கே. மணி அவர்களிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. அதைத் தொடர்ந்து பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி இதுகுறித்து விவாதித்தது.
கட்சி விரோத செயல்பாடுகள் குறித்து ஜி.கே. மணி எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், கட்சியின் அமைப்பு விதி 30-இன்படி அடிப்படை உறுப்பினரிலிருந்து அவரை நீக்கலாம் என்று கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்தது.
அதை ஏற்று ஜி.கே. மணி பாமகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நீக்கப்படுவதாகக் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருக்கிறார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜி.கே. மணியுடன் பாமகவினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The PMK leadership under Anbumani Ramadoss announced that G.K. Mani, a senior leader and MLA from Pennagaram, has been removed from the party’s primary membership.
PMK | GK Mani | Anbumani | Ramadoss |