பாஜகவுடன் கூட்டணி: பாமக

"பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உயர்நிலைக் குழுவில் முடிவு" - பாமக பொதுச்செயலாளர் வடிவேலு ராவணன்
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட பாமக முடிவு செய்துள்ளதாக அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் வடிவேலு ராவணன் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முழுமையாக நிறைவடைந்தபோதிலும், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை இன்னும் இறுதி செய்யாமல் உள்ளன. தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவில்லை. தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி என்று அறிவித்தபோதிலும், எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது.

பாமக, அதிமுக கூட்டணியில் இணைகிறதா, பாஜக கூட்டத்தில் இணைகிறதா என்பது உறுதியாகாமல் இருந்தது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக உயர்நிலைக் கூட்டம் இன்று கூடியது. மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என உயர்நிலைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாமக மாநிலப் பொதுச்செயலாளர் வடிவேலு ராவணன் கூறியதாவது:

"பாமக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது என்பதை ராமதாஸ் அறிவிப்பார். அதேபோல எந்தெந்த தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன, இதற்கான வேட்பாளர்கள் யார் என்பதையும் ராமதாஸ் நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிப்பார்" என்றார் அவர்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாக பாமக முடிவு செய்துள்ளதை தமிழக பாஜக தனது எக்ஸ் தளத்தில் உறுதி செய்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in