

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிசம்பர் 14 முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இந்தத் தேர்தலில் பாமக கட்சி குறித்து மிகுந்த எதிர்பார்ப்புகள் உள்ளன. ராமதாஸ் தரப்பு பாமக, அன்புமணி தரப்பு பாமக என இரு பிரிவுகளாக பாமக செயல்பட்டு வருகிறது. கட்சி அதிகாரத்தைப் பொறுத்தவரை அன்புமணிக்குச் சாதகமாகவே தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு இருக்கிறது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வரும் பாமக ஒன்றிணையுமா என்ற கேள்வி இருக்கிறது. ஒன்றிணையாத பட்சத்தில் பாமக வாக்குகள் பிரிய வாய்ப்பு இருப்பதால் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இது சிக்கலை உண்டாக்கும். அன்புமணி தரப்பு பாமக, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான சூழலே கனிந்து வருகின்றன. இந்தக் கூட்டணி கைக்கூடினால், ராமதாஸ் தரப்பு பாமக கூட்டணி தொடர்பாக என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.
இந்நிலையில் தான் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் விருப்ப மனுக்களைப் பெற அன்புமணி முடிவெடுத்திருக்கிறார். இதற்கு ராமதாஸ் தரப்பிலிருந்து எதிர்வினை ஆற்றப்படுமா அல்லது ராமதாஸ் தரப்பு சார்பில் தனியாக விருப்ப மனுக்கள் பெறப்படுமா என்பது அடுத்தடுத்த நாள்களில் தெரியவரும்.
இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பாமக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 20 வரை ஒரு வாரத்துக்கு விருப்ப மனுக்கள் பெறப்படும்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள கட்சித் தலைவர் அலுவலகத்தில் மேற்குறிப்பிட்ட நாள்களில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குபவர்கள் விண்ணப்பிக்கக் கடைசி நாளான டிசம்பர் 20 அன்று மாலை 6 மணிக்குள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை நிரப்பி, பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
PMK president Anbumani Ramadoss has announced that cadres aspiring to contest in the upcoming elections must submit their poll nomination applications starting December 14, with the process open until December 20.
PMK | Anbumani | Ramadoss | Anbumani Ramadoss | Election 2026 |