கோவையில் பிரதமர் மோடியின் வாகனப் பேரணி நிறைவு: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

1998 கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
கோவையில் பிரதமர் மோடியின் வாகனப் பேரணி நிறைவு: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

பிரதமர் நரேந்திர மோடி கோவையில் இன்று மாலை வாகனப் பேரணி மேற்கொண்டார்.

கோவை சாய்பாபா கோயில் சிக்னல் பகுதியிலிருந்து இந்தப் பேரணி தொடங்கியது. மேட்டுப்பாளையம் சாலையில் தொண்டர்கள் மத்தியில் பேரணி நடைபெற்றது. சாலைகளின் இருபுறத்திலிருந்தும் தொண்டர்கள் மலர்களைத் தூவி உற்சாகமாக வரவேற்றார்கள்.

மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிரதமரின் வாகனப் பேரணியில் உடனிருந்தார்கள். பிரதமர் தொண்டர்களையும், பொது மக்களையும் நோக்கி கையசைத்தபடி பேரணியை மேற்கொண்டார்.

இந்தப் பேரணியானது சுமார் 2.5 கி.மீ. தூரம் கடந்து ஆர்.எஸ். புரம் தபால் நிலையம் அருகே நிறைவடைந்தது. பேரணி நிறைவுற்ற இடத்தில் 1998 கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பேரணியைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இன்று இரவு தங்குகிறார்.

பிரதமர் மோடி நாளை காலை அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு பிற்பகல் சேலம் வருகிறார். சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றுகிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in