
தமிழகத்திற்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் எப்போதும் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வரமாட்டார் எனப் பேசியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.
மதுரை மாவட்டம் மேலூரில் அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக, அப்பகுதியைச் சேர்ந்த அ. வள்ளாலப்பட்டி கிராமத்தில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு இன்று (ஜன.30) பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அண்ணாமலை பேசியதாவது,
`பிரதமர் நரேந்திர மோடி அய்யாவுக்குப் பதிலாக இன்று மத்திய சுரங்க அமைச்சர் அண்ணன் கிஷண் ரெட்டி இங்கே வந்திருக்கிறார். ஏறத்தாழ 4,980 ஏக்கரில் சுரங்கம் அமைத்து மத்திய அரசு டங்ஸ்டன் எடுக்கப்போகிறது என்ற அறிவிப்பை அடுத்து, இந்தப் பகுதியைச் சேர்ந்த நீங்கள் வருத்தமடைந்தீர்கள்.
ஒரு விஷயத்தை மட்டும் புரிந்துகொள்ளுங்கள், பிரதமர் நரேந்திர மோடி அய்யா தமிழகத்திற்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் எப்போதும் கொண்டு வரமாட்டார். எங்களுக்கு முன்பு இருந்த அரசு மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் கையெழுத்திட்டது. நாம் ஆட்சிக்கு வந்த பிறகே அந்த திட்டம் நிறுத்தப்பட்டது.
இந்தப் பகுதி குறித்தும், இங்கு நடைபெறும் விவசாயம் மற்றும் இப்பகுதியின் தொன்மை குறித்தும் மத்திய சுரங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது நம் கடமை. ஆனால் இது குறித்து மாநில அரசுக்குத் தெரியும். அதேநேரம் ஏலம் எடுத்த பிறகுதான் இது குறித்து எங்களுக்குத் தெரிய வந்தது.
மத்திய அரசு தொடர்பான திட்டத்தை ரத்து செய்வது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. ஆனால் 12 அம்பலக்காரர்கள் மத்திய அமைச்சரை சந்தித்த 24 மணிநேரத்தில் திட்டம் ரத்து செய்யப்பட்டது. உங்கள் மண் உங்கள் கையைவிட்டுப் போய்விடக்கூடாது என்று பிரதமர் மோடி உங்களுக்காக இந்த முடிவை எடுத்தார்.
எனக்குத் தெரியும் இந்த இடத்தில் அரசியல் பேசக்கூடாது, ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் இத்திட்டம் ரத்து செய்யப்படவில்லை. உங்களுக்காக மட்டும் மோடி அய்யா இந்த திட்டத்தை ரத்து செய்தார். மாநில அரசைப் பார்த்து மோடி அய்யா என்றைக்கும் பயந்தது கிடையாது.
ஒரு விவசாயி மகனாக மாநில அரசுக்குக் கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றேன். இந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவியுங்கள். இந்த உரிமை மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது’ என்றார்.