பிரதமர் மோடி 6-வது முறையாக நாளை தமிழ்நாடு வருகை!

பிரதமர் மோடி 6-வது முறையாக நாளை தமிழ்நாடு வருகை!

நாளை பிற்பகல் 3 மணி முதல் தியாகராய சாலையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி 6-வது முறையாக நாளை மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 11 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் மோடி இதுவரை 5 முறை தமிழ்நாட்டுக்கு வந்து வாக்கு சேகரித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக இரு நாள் பயணமாக 6-வது முறையாக நாளை மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.

சென்னை தியாகராய நகர் பாண்டி பஜார் பகுதியில் மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம், தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி சாலைப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார்.

இதைத் தொடர்ந்து, நாளை மறுநாள் வேலூர் மற்றும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பிரதமரின் சாலைப் பேரணியை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு, 100 அடி சாலை, அண்ணா சாலை, எஸ்.வி. படேல், காந்தி மண்டபம் சாலை மற்றும் தியாகராய நகர் ஆகிய இடங்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் அறிவுறுத்தியுள்ளது.

பிற்பகல் 3 மணி முதல் தியாகராய சாலையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தியாகராய சாலை முழுவதும், வெங்கட நாராயண சாலை, ஜி.என். செட்டி, சாலை மற்றும் வடக்கு போக் சாலை ஆகிய பகுதிகளில் சாலைப் பேரணி முடியும் வரை வாகனம் நிறுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றங்கள் குறித்த முழு விவரம்: இதை க்ளிக் செய்யவும்..

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in