பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா: தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி!

பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா: தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி!
ANI
1 min read

பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தின் திறப்பு விழாவிற்காக நாளை (ஏப்ரல் 6) தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கடந்த 2020-ல் தொடங்கப்பட்ட புதிய ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்தாண்டின் இறுதியில் நிறைவுபெற்றன. 1914-ல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ரயில் பாலத்திற்கு மாற்றாக புதிய ரயில் பாலம் கட்டப்பட்டது.

அரசு முறைப் பயணமாக இலங்கையில் உள்ள பிரதமர் மோடி, நாளை (ஏப்ரல் 6) காலை 10.40 மணி அளவில் அந்நாட்டின் அநுராதபுரத்தில் இருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் புறப்பட்டு, காலை 11.45 மணி அளவில் மண்டபம் ஹெலிபேட் தளத்தில் தரையிறங்குகிறார்.

அதன்பிறகு கார் மூலம் பாம்பன் சாலைப் பாலத்திற்கு வருகை தந்து, நண்பகல் 12 மணி அளவில் பாம்பன் புதிய ரயில் தூக்குப் பாலத்தை அவர் திறந்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து, பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர், அதன்பின் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.

இதன் தொடர்ச்சியாக நடைபெறும் விழாவில், வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டை, விழுப்புரம்-புதுச்சேரி, பூண்டியன்குப்பம்-சட்டநாதபுரம், சோழபுரம்-தஞ்சாவூர் பகுதிகளுக்கான சாலை திட்டப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமரின் வருகையை ஒட்டி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in