கன்னியாகுமரியில் மே 31-ல் பிரதமர் மோடி தியானம்
ANI

கன்னியாகுமரியில் மே 31-ல் பிரதமர் மோடி தியானம்

2019-ல் உத்தரகண்ட் மாநிலம் கேதர்நாத்திலுள்ள குகை ஒன்றில் தொடர்ந்து 17 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டார் பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி மே 31-ல் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலின் 7-வது மற்றும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு ஜூன் 1-ல் தான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன்பிறகு, ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தியானம் மேற்கொள்வதற்காக வரும் 30 அன்று கன்னியாகுமரிக்கு வருகிறார். குமரிக் கடலில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் மே 31-ல் தியானம் செய்யும் அவர், ஜூன் 1 அன்று கன்னியாகுமரியிலிருந்து புறப்படுகிறார். இரண்டாவது நாளாக ஜூன் 1-ம் தேதியும் தியானம் செய்ய பிரதமர் திட்டமிடுகிறாரா என்பது பின்னர்தான் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

2019 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தபோதும், பிரதமர் மோடி இதேபோல தியானம் மேற்கொண்டார். அப்போது உத்தரகண்ட் மாநிலம் கேதர்நாத்திலுள்ள குகை ஒன்றில் தொடர்ந்து 17 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டார் பிரதமர் மோடி.

பிரதமரின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தில்லியிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in