
தமிழ்நாட்டிற்கு இன்று (ஜூலை 26) வருகை தரும் பிரதமர் மோடி, ரூ. 4,800 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, நாளை (ஜூலை 27) ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நிறைவு நாள் விழாவில் கலந்துகொள்கிறார்.
நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த ஜூலை 23 அன்று இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளுக்கு தலைநகர் தில்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. இந்நிலையில், இன்று (ஜூலை 26) மாலத்தீவில் இருந்து கிளம்பி இரவு 7.50 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அவர் வருகை தருகிறார்.
இதைத் தொடர்ந்து, ரூ. 451 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்து, செட்டிநாடு கட்டடக் கலையை பிரதிபலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்தின் புதிய பயணிகள் முனையத்தை பிரதமர் பார்வையிடுகிறார்.
அதன்பிறகு ரூ. 4,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவுபெற்ற பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்துவிட்டு உரையாற்றுகிறார். பின்னர், இரவு 9.40 மணி அளவில் தூத்துக்குடியில் இருந்து திருச்சிக்குச் புறப்பட்டுச் செல்லும் பிரதமர், அங்குள்ள தனியார் விடுதியில் இன்று (ஜூலை 26) இரவு தங்குகிறார்.
நாளை (ஜூலை 27) திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, நண்பகல் 12 மணி அளவில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்லும் பிரதமர், அங்குள்ள பெருவுடையார் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்கிறார்.
அதன்பிறகு ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். இதற்கிடையே கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கச்சேரி நடைபெறும் என்று கூறப்படுகிறது.