பல்லடத்திலும் மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன்: பிரதமர் மோடி

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடக்கி வைக்கவிருக்கிறார்.
பல்லடத்திலும் மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன்: பிரதமர் மோடி
ANI
2 min read

இருநாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பல்லடத்திலும், மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றதாகத் தெரிவித்தார்.

என் மண், என் மக்கள் நடைப்பயணத்தின் நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று பிற்பகல் தமிழ்நாடு வந்தார். கேரளத்திலிருந்து தனி விமானம் மூலம் கோவையிலுள்ள சூலூர் விமானப் படைத் தளத்துக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் சென்ற பிரதமர் மோடி, பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் ஈரோடு விவசாயிகள் சார்பில் அவருக்கு 67 கிலோ எடை கொண்ட மஞ்சள் மாலை அணிவிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு காளையின் சிலையும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, "ஜல்லிக்கட்டு காளையின் சிலையை பெறும்பொழுதும் மிக்க மகிழ்ச்சியாக உணர்ந்தேன். காங்கிரசும், திமுகவும் ஜல்லிக்கட்டைப் பாதுகாக்க எதுவுமே செய்யவில்லை என்பதை தமிழ்நாடு மறந்துவிடவில்லை. நமது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தமிழ்நாட்டின் பெருமைமிகு கலாச்சாரத்தோடு தொடர்புடைய ஜல்லிக்கட்டு மிகுந்த உற்சாகத்துடன் தொடர்வதை உறுதிசெய்தது" என்றார்.

இதைத் தொடர்ந்து, மதுரை சென்ற பிரதமர் மோடி சிறு, குறு, தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்றார். இதை முடித்துக்கொண்டு தனியார் விடுதிக்குச் சென்ற பிரதமர் மோடி, இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மதுரையில் பிரதமர் மோடி சாலையின் இருபுறத்திலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி காரில் சென்றுகொண்டிருந்தபோது, மதுரை ஆதீனத்தைச் சந்தித்தார். அவரைப் பார்த்தவுடன் காரை நிறுத்தச் சொல்ல, மதுரை ஆதீனம் பிரதமருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ANI

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்வதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இவற்றைத் தொடர்ந்து, இன்று காலை பிரதமர் மோடி தூத்துக்குடி புறப்பட்டார். மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பிரதமர் மோடியை தூத்துக்குடிக்கு வழியனுப்பி வைத்தார். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடக்கி வைக்கவிருக்கிறார்.

தூத்துக்குடி புறப்படுவதற்கு முன்பு, "பல்லடத்திலும் மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன். மகாராஷ்டிரத்தின் யவத்மாலுக்குப் புறப்படுவதற்கு முன் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இன்றைய நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுச் சென்றார் பிரதமர் மோடி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in