தமிழ்நாட்டுக்கு 3 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கியும் அழுகிறார்கள்: பிரதமர் மோடி

ஏழை மாணவர்கள் பயன் பெறும் வகையில், மருத்துவப் படிப்பின் பாடத்திட்டத்தைத் தமிழில் வழங்க வேண்டும் என மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டுக்கு 3 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கியும் அழுகிறார்கள்: பிரதமர் மோடி
3 min read

வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டை, விழுப்புரம்-புதுச்சேரி, பூண்டியன்குப்பம்-சட்டநாதபுரம், சோழபுரம்-தஞ்சாவூர் பகுதிகளுக்கான சாலை திட்டப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

அரசு முறைப் பயணமாக இலங்கை சென்ற பிரதமர் மோடி, ராமேஸ்வரம் பாம்பன் புதிய பாலத்தைத் திறந்து வைப்பதற்காக இன்று நண்பகல் ராமேஸ்வரம் வந்தடைந்தார். இலங்கையின் அநுராதபுரத்திலிருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஹெலிபேட் தளத்தில் தரையிறங்கினார்.

கார் மூலம் பாம்பன் சாலைப் பாலத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, பாம்பன் புதிய பாலத்தைத் திறந்து வைத்தார். 2.07 கி.மீ. நீளம், 6 மீட்டர் உயரம் கொண்ட புதிய பாலத்தை பிரதமர் மோடி ரிமோட் மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் புதிய பாம்பன் பாலத்தைத் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, மண்டபத்திலிருந்து ராமேஸ்வரத்துக்கு ரயில் இயக்கப்பட்டது. பாம்பன் புதிய பாலத்தை மேல் நோக்கி தூக்கச் செய்து கப்பல் போக்குவரத்தையும் அவர் தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்ற பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்குப் பூரணக் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

கோயிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டை, விழுப்புரம்-புதுச்சேரி, பூண்டியன்குப்பம்-சட்டநாதபுரம், சோழபுரம்-தஞ்சாவூர் பகுதிகளுக்கான சாலை திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதற்கான அரசு விழாவில் பங்கேற்பதற்காக விழா நடைபெறும் இடத்துக்கு வருகை தந்தார். விழாவின் தொடக்கத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் உரையாற்றினார்கள். இதைத் தொடர்ந்து, புதிய திட்டங்களுக்கு ரிமோட் மூலம் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. ராமேஸ்வரம் - தாம்பரம் இடையிலான ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

அரசு விழா மேடையில் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் இருந்தார்கள்.

இதன்பிறகு தலைமை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வணக்கம் மற்றும் என் அன்புத் தமிழ்ச் சொந்தங்களே என்று கூறி உரையைத் தொடங்கினார்.

"புனிதமான ராமநவமி நன்னாள். அனைவரும் என்னுடன் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்தை எழுப்புங்கள். ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஸ்ரீ ராம்!! ஜெய் ஸ்ரீ ராம்!!! தமிழ்நாட்டின் சங்க இலக்கியத்தில் கூட ராமரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இது பாரத ரத்னா விருது வென்ற அப்துல் கலாமின் மண். ராமேஸ்வரத்துக்கான பாம்பன் புதிய பாலத்தின் மூலம் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பாரம்பரியங்களை ஒன்றிணைக்கவுள்ளது.

புதிய பாலம் என்பது இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் வழிப் பாலம். சற்று நேரத்துக்கு முன்பு தான் புதிய ரயில் சேவை மற்றும் கப்பல் போக்குவரத்தைத் தொடக்கி வைத்தேன். புதிய பாலம் ஏற்படுத்தும் இணைப்பு மூலம் வணிகம் மற்றும் சுற்றுலாவுக்கு ஆதாயத்தை உண்டாக்கும். இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளையும் இது ஏற்படுத்தித் தரும்.

கடந்த 10 ஆண்டுகளில் பாரதம் தனது பொருளாதாரத்தை இரட்டிப்பாக்கியுள்ளது. இதற்குக் காரணம் நமது நவீன உள்கட்டமைப்பும் ஒரு காரணமாக அடங்கும். ரயில், சாலை, விமான நிலையம் உள்ளிட்டவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டை 6 மடங்கு உயர்த்தியுள்ளோம்.

கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் புதிய சரக்குப் போக்குவரத்து வழித்தடம் அமைக்கப்படுகிறது.

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற பயணத்தில் தமிழ்நாட்டுக்குப் பெரிய பங்கு உள்ளது. தமிழ்நாட்டில் வல்லமை எந்தளவுக்கு உயர்கிறதோ, அந்தளவுக்கு பாரதத்தின் வளர்ச்சி வேகமடையும். திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும் 3 மடங்கு நிதியை கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு அளித்திருக்கிறது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு இது அதிகளவில் உதவியிருக்கிறது.

இவற்றையெல்லாம் செய்த பிறகும் சில அழுதுகொண்டே இருக்கிறார்கள். அவர்களால் அழ மட்டும்தான் செய்ய முடியும்.

நிகழாண்டில் ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது ரூ. 6 ஆயிரம் கோடிக்கு அதிகம். தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்களை நவீனப்படுத்தி வருகிறோம். இதில் ராமேஸ்வரம் ரயில் நிலையமும் அடக்கம்.

தமிழ்நாட்டில் 2014-க்குப் பிறகு, மத்திய அரசின் உதவியுடன் 4,000 கி.மீ. தொலைவுக்குச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை மெட்ரோ உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நேரத்தில், இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

4 கோடிக்கும் அதிகமானோருக்கு கான்கிரீட் வீடுகள் கிடைத்துள்ளன. பிரதமர் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட கான்கிரீட் வீடுகள் இங்குள்ள ஏழை சகோதர, சகோதரிகளுக்குக் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சம் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டு மக்களுக்குத் தரமான மற்றும் விலை மலிவான சிகிச்சையளிக்கும் விஷயத்தில் அரசு அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்படி 1 கோடிக்கும் மேற்பட்ட சிகிச்சைகள் நடந்து முடிந்துள்ளன. தமிழ்நாட்டின் குடும்பங்கள் ரூ. 8 ஆயிரம் கோடி செலவிலிருந்து பயன் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் 1,400-க்கும் அதிகமான மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்கள் மருந்தகங்களில் 80% தள்ளுபடி கிடைக்கிறது.

இளைஞர்கள் மருத்துவப் படிப்பைப் பயில அயல்நாட்டுக்குச் செல்வது கட்டாயமாகிவிடக் கூடாது. தமிழ்நாட்டுக்கு 11 மருத்துவக் கல்லூரிகள் கிடைத்துள்ளன.

மருத்துவப் படிப்பைத் தமிழில் அமைக்க வேண்டும் என விரும்புகிறோம். இதன் பொருட்டு நான் வேண்டி விரும்பி மாநில அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஏழைக் குழந்தைகளும் மருத்துவப் படிப்பைப் படிக்க வேண்டும் என்பதற்காக பாடத்திட்டத்தைச் செய்து தாருங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மீன் வளத் துறையை வலுப்படுத்த அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. பாதுகாப்பு தொடர்புடைய அக்கறையும் இருக்கிறது. மத்திய அரசின் முயற்சிகளால் கடந்த 10 ஆண்டுகளில் 3,700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கையிலிருந்து மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளார்கள். இவர்கள் 600-க்கும் மேற்பட்டவர்கள் மட்டும் கடந்த ஓராண்டில் மீட்கப்பட்டுள்ளார்கள். தூக்கு மேடையை நெருங்கிய தருணத்திலிருந்து மீனவர்களை மத்திய அரசு மீட்டு கொண்டு வந்துள்ளது.

தமிழ்மொழி மற்றும் மரபு உலகின் அனைத்து இடங்களையும் சென்றடைய வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து சில தலைவர்கள் மடல்கள் எழுதுவதுண்டு. அந்தக் கடிதங்களில் எனக்கு மிகப் பெரிய ஆச்சர்யம் என்னவெனில், கடிதம் ஆங்கிலத்தில் இருக்கிறது. கையெழுத்தும் ஆங்கிலத்தில் இருக்கிறது. குறைந்தபட்சம் தமிழ் மொழியில் கையெழுத்திடக் கூடாதா என வியப்பதுண்டு.

மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நல்வாழ்த்துகள். நன்றி வணக்கம் மீண்டும் சந்திப்போம்" என்றார் பிரதமர் மோடி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in