பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தைத் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கடந்த 2020-ல் தொடங்கப்பட்ட புதிய ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்தாண்டின் இறுதியில் நிறைவுபெற்றன. 1914-ல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ரயில் பாலத்திற்கு மாற்றாகப் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டது.
அரசு முறைப் பயணமாக இலங்கை சென்ற பிரதமர் மோடி, இன்று காலை 11 மணி அளவில் அந்நாட்டின் அநுராதபுரத்தில் இருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மண்டபம் ஹெலிபேட் தளத்தில் தரையிறங்கினார்.
மத்திய இணையமைச்சர் எல். முருகன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, ராமநாதபுரம் ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே. வாசன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், சரத்குமார், ஹெச் ராஜா உள்ளிட்டோர் வரவேற்றார்கள். ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோரும் பிரதமர் மோடியை வரவேற்றார்கள்.
அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலைப் பாலத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். வரும் வழியில் சாலையின் இருபுறத்திலிருந்த மக்களுக்கு பிரதமர் மோடி கைகளை அசைத்தார். 2.07 கி.மீ. நீளம், 6 மீட்டர் உயரம் கொண்ட புதிய பாலத்தை பிரதமர் மோடி ரிமோட் மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் புதிய பாம்பன் பாலத்தைத் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, மண்டபத்திலிருந்து ராமேஸ்வரத்துக்கு ரயில் இயக்கப்பட்டது.
பாம்பன் புதிய பாலத்தை மேல் நோக்கி தூக்கச் செய்து கப்பல் போக்குவரத்தையும் அவர் தொடக்கி வைத்தார்.
இவற்றைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு பிரதமர் மோடிக்கு பூரணக் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நடைபெறும் விழாவில், வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டை, விழுப்புரம்-புதுச்சேரி, பூண்டியன்குப்பம்-சட்டநாதபுரம், சோழபுரம்-தஞ்சாவூர் பகுதிகளுக்கான சாலை திட்டப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமரின் வருகையை ஒட்டி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, ராமநாதசுவாமி கோயிலில் ஆளுநர் ஆர்.என். ரவி சாமி தரிசனம் செய்தார்.