

கோவையில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, நாட்டின் 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ. 2,000 ஊக்கத்தொகையாக வழங்குவதற்கான ரூ. 18,000 கோடி நிதியை விடுவித்தார்.
கோவையில் இன்று முதல் 3 நாள்களுக்கு தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 50,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக கோவை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் சுவாமிநாதன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து அங்கிருந்து கொடிசியா மைதானத்திற்குச் சாலைவலமாக வந்த அவருக்கு சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தார்கள்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி வேளாண் மாநாட்டைத் தொடங்கி வைத்து வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கி கௌரவித்தார். மேலும், பிரதமரின் விவசாயிகள் கவுரவிப்பு நிதி திட்டத்தின் 21-வது தவணையாக ரூ.18,000 கோடி நிதியை விடுவித்தார். இதன்மூலம் நாட்டின் 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ. 2,000 உதவித்தொகை பெறுவார்கள்.
அதன் பின் அவர் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது பேசியதாவது:-
“புட்டபர்த்தி நிகழ்ச்சியை முடித்துவிட்டு வரக் காலதாமதம் ஆகியதற்கு மன்னிப்பு கோருகிறேன். எனக்கு முன்பு பேசிய பி.ஆர். பாண்டியன் உரையைக் கேட்டபோது, சிறுவயதில் நான் தமிழையும் கற்றிருக்கலாமே என்று தோன்றியது. அவர் தமிழில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியது எனக்குப் புரியவில்லை என்றாலும், அவரது உணர்வு என்னைத் தொட்டது. நான் அந்த உரையை ஆங்கிலத்திலோ இந்தியிலோ மொழிபெயர்த்துக் கொடுக்குமாறு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் விண்ணப்பித்திருக்கிறேன். நான் மேடைக்கு வந்தபோது வேளாண் குடிமக்கள் தங்கள் மேல் துண்டை கையால் தலைக்கு மேலே சுழற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அதைக் கண்டதும் பிஹாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று மனம் எண்ணியது.
கோவையின் மண்ணில் மருதமலை முருகனை முதலில் தலைவணங்குகிறேன். நமது நாட்டின் இயற்கை விவசாயம் சிறப்பானது. அது எனது மனதுக்கு நெருக்கமானது. இந்த மாநாட்டிற்கு வராமல்போயிருந்தால் நான் பல விஷயங்களை கற்காமல் போயிருப்பேன். இயற்கை விவசாயத்தில் இந்தியா உலக அளவிலான மையப்புள்ளியாக மாறி வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் வேளாண் துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. விவசாயத்திற்கு உதவும் அனைத்து வழிகளையும் அரசாங்கம் திறந்துவிட்டுள்ளது. இயற்கை விவசாயிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். இயற்கை விவசாயத்தின் பல்கலைக்கழகமாக இந்தியா திகழ்கிறது.
இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு மத்திய அரசு ஊக்கம் அளித்து வருகிறது. இயற்கை விவசாயம்தான் காலநிலை மாற்றத்துக்கு ஒரே தீர்வு. அரசின் திட்டங்களினால் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்றிணைந்துள்ளார்கள். இதனால் ஏற்பட்ட ஆக்கப்பூர்வமான மாற்றத்தை தென் மாநிலங்களில் பார்க்க முடிகிறது. உயிரி உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கபட்டுள்ளதால் விவசாயிகள் ஆதாயம் அடைந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் 35,000 ஹெக்டேர் நிலத்தில் இயற்கை வேளாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு தேனும் திணை மாவையும் பிரசாதமாக படைக்கிறோம். கேரளா, கர்நாடகாவிலும் சிறுதானியங்களை இறைவனுக்குப் படைக்கிறார்கள்.
இயற்கை வேளாண்மை என்பது நமது நாட்டின் சுதேச கருத்து. அது நமது பாரம்பரியத்துடன் நம்மை இணைக்கிறது. இதனை நாம் எங்கிருந்தும் பெறவில்லை. இறக்குமதி செய்யவில்லை. நம் நாட்டின் சொந்த சொத்து இது.
விவசாயிகள் கடன் அட்டை மூலம் இந்த ஆண்டு ரூ. 10,000 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. 9 கோடி விவசாயிகளுக்கு 21-வது தவணையாக ரூ.18,000 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. சிறு விவசாயிகளுக்கு இதுவரை ரூ. 4 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நிதியுதவி திட்டத்தால் பலனடைந்த விவசாயிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பயிர் விவசாயத்தில் இருந்து விவசாயிகள் மாற வேண்டும். ஊடு பயிர் சாகுபடி செய்ய வேண்டும். ஊடுபயிர் சாகுபடி முறையை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.
இந்த உணவு பொருட்கள் உலகச் சந்தையை அடைய வேண்டும். இதற்கு இயற்கை விவசாயத்துக்கு முக்கிய பங்கு உண்டு. விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும். உலகத்தின் மிக பழமையான, இன்றும் செயல்படும் அணைகள் தமிழ்நாட்டில் உள்ளன.இயற்கை விவசாயத்துறையில் இந்தியா முன்னேறி ஆக வேண்டும். வேளாண் பாட திட்டத்தில் இயற்கை விவசாயம் கொண்டு வர வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு பருவத்தில் இயற்கை விவசாயம் என்ற புரட்சியை தொடங்குங்கள். இயற்கை வேளாண்மை சந்தையை வளப்படுத்த வேண்டும். விவசாயிகளின் தன்னிறைவுக்கு அரசின் ஆதரவு முக்கியம்.” என்றார்.
Prime Minister Modi inaugurated the South India Natural Farming Summit in Coimbatore, released a fund of Rs. 18,000 crore to provide an incentive of Rs. 2,000 each to 9 crore farmers in the country.