

தமிழ்நாட்டை ஒரு குடும்பத்தின் ஏடிஎம் ஆக திமுக மாற்றியிருக்கிறது. அந்தக் கட்சியில் எல்லாம் ஒரு குடும்பத்தில் தொடங்கி அதே குடும்பத்தில் முடிவடைந்துவிடும் என்று பிரதமர் மோடி விமர்சித்தார்.
திருச்சி பஞ்சப்பூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
திமுக அரசு தூக்கி எறியப்படும்
திருச்சி நெஞ்சுரம், நம்பிக்கை நிறைந்த நிலம். மருது சகோதரர்களின் தைரியத்தைப் பார்த்த பூமி, கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த மேஜர் சரவணனை நினைவுகூர்கிறேன். சில மாதங்களுக்கு முன் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெரும்பிடுகு முத்தரையரை கௌரவிக்கும் தபால் தலையை வெளியிட்டார். ஆடி மாதத்தில் காவிரி ஆறு தடுக்க முடியாத ஆற்றலுடன் பாயும். அதைப் போலவே இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆற்றலுடன் வெற்றி அடையும். திமுக அரசை தூக்கி எறிய மொத்த மாநிலமும் தீர்மானித்துவிட்டது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
ரூ. 5,600 கோடி மதிப்பிலான திட்டம்
சில நாள்களுக்கு முன் திருச்சிக்கு ரூ. 20,000 கோடி மதிப்பிலான திட்டங்களோடு வந்தேன். சமீபத்தில் மதுரையில் ரூ.4400 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று திருச்சியில் ரூ. 5,600 கோடி மதிப்பிலான திட்டங்களுடன் கூடிய நிகழ்ச்சியை முடித்துவிட்டு வந்திருக்கிறேன். தமிழ்நாட்டில் எதிர்காலம் பெரிய முதலீட்டைச் செய்து வருகிறோம். இவை பல முக்கிய துறைகளுக்குப் பயனளிக்கும். இவற்றால் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
மதுரை சர்வதேச விமான நிலையம்
தமிழ்நாட்டின் கட்டடக் கலை உலக மக்களை ஈர்க்கிறது. அவர்கள் சென்னையிலிருந்து மட்டும் வருவதில்லை. திருச்சி வழியாகவும் வருகிறார்கள். திருச்சியிலே நம் அரசு புதிய முனையத்தைக் கட்டிய பிறகு பலர் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள். இப்போது தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மத்திய அரசு தரமுயர்த்தியுள்ளது. இதன் மூலம் உலகத்தை மதுரையின் வாசலில் கொண்டு வந்திருக்கிறோம். உலக நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள், தொழில் முனைவோர் மதுரைக்கு நேரடியாக வருவார்கள். காலையில் விவசாயிகளால் பறிக்கும் மதுரை மல்லி, அன்று மாலைக்குள் பாரிஸ், அமெரிக்கா கடைகளுக்குக் கொண்டு சேர்க்கப்படும்.
முந்தைய ஆட்சியை விட அதிக வளர்ச்சி
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு தமிழ்நாட்டின் முன்னேற்றம் முக்கியமானது. 2014-ல் இருந்து ரூ. 3 லட்சம் கோடியை நிதிப்பகிர்வு செய்யப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் - திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டதை விடப் பன்மடங்கு உயர்ந்தது. கடந்த 10 ஆண்டில் ரூ. 57,000 கோடி தேசிய நெடுஞ்சாலையில் செலவிட்டிருக்கிறது. இது முந்தைய ஆட்சி செலவிட்டதை விட 4 மடங்கு அதிகம். தமிழ்நாட்டில் ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ. 8,000 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. இது முந்தைய ஆட்சி செலவிட்டதை விட 3% அதிகம்.
தமிழ்நாடு ஒரே குடும்பத்திற்கு ஏடிஎம்?
2021-ல் தமிழ்நாடு மக்கள் திமுகவை ஆட்சிக்குக் கொண்டுவந்தார். அந்தப் பொறுப்பைச் சரியாகச் செய்யாமல், கடமையாக நினைத்து எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள். திமுக ஆட்சியில் அனைத்தும் ஒரு குடும்பத்துடன் தொடங்கி, ஒரே குடும்பத்துடன் முடிந்துவிடுகிறது. அமைச்சர்கள் மாறலாம் சட்டசபை உறுப்பினர்கள் மாறலாம் அதிகாரம் ஒரே குடும்பத்துடன் தான் இருக்கிறது. விஞ்ஞான ரீதியான ஊழல் மாதிரிக்கு பெயர் போனது திமுக. அதே மாதிரிதான் தமிழ்நாட்டை ஒரு குடும்பத்திற்கு ஏடிஎம் மாற்றி இருக்கிறார்கள். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெரிய மோசடியில் சிக்கியிருக்கிறார். அரசு வேலைகள் விற்கப்படும்போது நேர்மையான ஏழை இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் கனவுகள் அழிக்கப்படுகிறது. ஆறுகள் எல்லாம் கடலில் கலப்பது போல, அனைத்து ஊழல் பணமும் ஒரே குடும்பத்திற்குச் செல்கிறது.
திமுக வாக்குறுதிகள் குறித்து விவசாயிகள் கேள்வி
டெல்டா விவசாயிகள் தான் தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பின் முதுகெலும்பு. நியாயமான விலைகள், நல்ல வசதிகள், நவீன சேமிப்புக் கட்டமைப்புக்கு உரித்தானவர்கள். நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டித் தருவதாக திமுக வாக்குறுதி கொடுத்தது. விவசாயிகள் இப்போது அத்தகைய சேமிப்புக் கிடங்குகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஏற்றுவதாக திமுக வாக்களித்தது நினைவிருக்கிறதா? சத்தியம் செய்து கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது என்று விவசாயிகள் கேட்கிறார்கள்.
மக்கள் நலனில் அக்கறை கொண்டது தேஜகூ
திமுகவுக்கு மக்கள் நலத்தை விட அரசியல்தான் முக்கியம். ஊரகப் பகுதி ஏழைகளுக்கான வீடு கட்டும் தி்ட்டத்தைத் தாமதப் படுத்தியிருக்கிறார்கள். ஏன் தெரியுமா? மத்திய அரசை மக்கள் புகழ்ந்துவிடுவார்கள் என்று பயம்தான். மத்திய அரசு தமிழ்நாட்டை அரிய கனிம வள மையமாக அறிவித்துள்ளது. பெங்களூரு - சென்னை, சென்னை - ஐதராபாத் புல்லட் ரயில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுதான் மக்கள் நலனை முன்னிறுத்தும் அரசியல். இவை தமிழ்நாட்டை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும். இவற்றைச் செயல்படுத்த மக்கள் நலனில் அக்கறை கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு தமிழ்நாட்டிற்குத் தேவை.
மகளிருக்கு நலன் தரும் மத்திய அரசு
சில நாள்களுக்கு முன் உலகம் மகளிர் தினத்தைக் கொண்டாடியது. பெண்களுக்கு மதிப்பளிப்பதில் நம்மை விட நமது பணிகளே பேசும். நாம் ஜந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். அதன் மூலம் உருவாக்கப்பட்ட 57 கோடிக்கும் மேலான வங்கிக் கணக்குகளில் 37 கோடிகள் பெண்களுடையவை. முத்ரா திட்டத்தில் பல லட்சம் பெண்களுக்கு சுய தொழில் தொடங்க மத்திய அரசு நிதி அளித்துள்ளது. பெண் தொழில் முனைவோருக்கு ரூ.16 லட்சம் கோடிகளைக் கொடுத்துள்ளோம். இலவச வீடுகட்டும் திட்டத்தில் 4 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 3 கோடி வீடுகளுக்கு கூட்டாகவோ தனியாகவோ பெண்கள் சொந்தங்காரர்களாக இருக்கிறார்கள்.
திமுக ஆட்சியில் பெண்களின் நிலை
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில் சிறுமியை கூட விட்டு வைக்காத திமுக உறுப்பினர் பற்றிய செய்தியை பார்த்தோம். பெண்களுக்கு தீங்கு ஏற்படுத்திவிட்டு பயமே இன்றி வாழ்கிறார்கள். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி, பெண்கள் அச்சமோ பயமோ இன்றி வாழ்வதை உறுதி செய்யும். நாங்கள் உறுதியான சட்டம் ஒழுங்கை கொடுப்போம். எங்கள் ஆட்சியில் குற்றவாளிகள் தான் பயத்தில் இருப்பார்கள். மக்கள் இல்லை.
வதந்திகளை நம்பாதீர்கள்
தமிழ்நாட்டில் மேற்காசிய போரைப் பற்றி பேச விரும்புகிறேன். உலகின் ஒட்டுமொத்த எரிசக்தி வழங்கல் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தச் சூழலிலும் இந்தியாவுக்கே முதன்மை என்ற கொள்கையில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். இப்போது நிறைய வதந்திகள் பரவுகின்றன. யாரும் வதந்திகளை நம்பாதீர்கள். சரியான தகவல்களை மட்டுமே பரப்புங்கள்.
தமிழ்நாடு மாற்றத்தை விரும்புகிறது
தமிழ்நாட்டின் வரலாற்றில் வரும் தேர்தல் மிக முக்கியமானது. மக்கள் முன் இருக்கும் தேர்வு தெளிவாக உள்ளது. ஒன்று - ஊழல், வம்சாவளி ஆட்சி, பொய்யான வாக்குறுதிகள் நிறைந்த பாதை. மற்றொன்று - வளர்ச்சி வாய்ப்பு, நாணயமான ஆளுகையைக் கொண்ட பாதை. ஆழமான அறிவு கொண்ட மக்கள் இதில் சரியானதைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. நாம் அனைவரும் வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம். திருச்சி மக்களே! தமிழ்நாடு மாற்றத்தை விரும்புகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரும்புகிறது என்ற குரல் மாநிலம் எங்கும் ஒலிக்க வேண்டும்”
Prime Minister Modi criticized that, the DMK has turned Tamil Nadu into an ATM of one family. Everything in that party starts and ends in one family he added.