சென்னை தியாகராய நகரில் பிரதமர் மோடியின் சாலைப் பேரணி நிறைவு!

தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்.
சென்னை தியாகராய நகரில் பிரதமர் மோடியின் சாலைப் பேரணி நிறைவு!

சென்னை தியாகராய நகரில் பிரதமர் நரேந்திர மோடி சாலைப் பேரணி மூலம் வாக்கு சேகரித்தார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக மஹாராஷ்டிரத்திலிருந்து தனி விமானம் மூலம் தமிழ்நாடு வந்துள்ளார். மாலை 6 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் வரவேற்றார்கள்.

சென்னை தியாகராய நகர் பனகல் பூங்கா பகுதியிலிருந்து ஏறத்தாழ 2 கி.மீ. தூரத்துக்கு பிரதமர் மோடி சாலைப் பேரணி மேற்கொண்டார். தியாகராய நகர் பகுதி தென் சென்னை தொகுதியில் வருகிறது. இங்கு பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார்.

தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி. செல்வம், வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். பிரதமர் செல்லும் வாகனத்தில் மூன்று பாஜக வேட்பாளர்கள் மற்றும் அண்ணாமலை உடனிருந்தார்கள். சாலையின் இருபுறத்திலும் அவருக்கு மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியின் குடும்பம், வேண்டும் மோடி போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தொண்டர்கள் ஏந்தியிருந்தார்கள்.

அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்தப் பேரணி, தேனாம்பேட்டை பகுதியில் நிறைவு பெற்றது.

இதைத் தொடர்ந்து, சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி தங்குகிறார்.

நாளை காலை 9 மணியளவில் வேலூர் செல்லும் பிரதமர் மோடி வேலூர் கோட்டை மைதானத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். வேலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி. சண்முகம், தருமபுரியில் பாமக சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணி ஆகியோரை ஆதரித்து பிரதமர் வாக்கு சேகரிக்கிறார். இதற்காக, வேலூரில் சுமார் 4 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in