
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த டிசம்பர் 1-ல் கரையைக் கடந்தது. அப்போது கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையுடன், பலத்த வேகத்துடன் சூரைக் காற்று விசியதால் சாலைகள், மின் இணைப்புகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் கடுமையாக் சேதமடைந்தன.
மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற உள்மாவட்டங்களும் கனமழையால் பாதிக்கப்பட்டன. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரே நாளில் 50 செ.மீ. கனமழை பெய்தது. ஃபெஞ்சல் ஏற்பட்ட இந்த பேரிடரால் ஒட்டுமொத்தமாக 69 லட்சம் குடும்பங்களும், 1.5 கோடி பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள சேதாரங்களைக் கருத்தில் கொண்டு உட்கட்டமைப்பு, பொதுமக்கள் வாழ்வாதாரம் ஆகியவற்றை தற்காலிகமாக சீரமைக்க ரூ. 2 ஆயிரம் கோடி நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கு நேற்று (டிச.2) கடிதம் எழுதினார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் இன்று காலை கேட்டறிந்தார் பிரதமர் மோடி. அப்போது தமிழ்நாட்டிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் மத்திய அரசு வழங்கும் என ஸ்டாலினிடம் உறுதியளித்துள்ளார் மோடி.
மேலும், ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள 3 மத்தியக் குழுக்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு விரைவில் வர இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.