
வேங்கைவயல் வழக்கில் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது தொடர்பான வழக்கில், அப்பகுதியைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் மீது புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சார்பில் இன்று (ஜன.27) புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், `சிபிசிஐடி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட உண்மை வெளிவதற்குக் காரணமாக இருந்தவர்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கு விசாரணையின்போது, வழக்கு தொடர்பான காணொளிகள் மற்றும் ஆதாரங்களை காவல்துறை வெளியிட்டது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. எனவே சிபிசிஐடியால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.