
சென்னை மெரினா உணவுத் திருவிழாவில் திட்டமிட்டு மாட்டிறைச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளது நீலம் பண்பாட்டு மையம்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் நடத்தும் உணவுத் திருவிழாவை சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் கடந்த டிச.20-ல் தொடங்கிவைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
இந்த உணவுத் திருவிழாவில் 65 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மகளிர் மூலம் மொத்தம் 35 உணவு அரங்குகள் அமைக்கப்பட்டு, பல மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. வரும் டிச.24 வரை நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் மதியம் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பார்வையாளர் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிரை தொழில் முனைவர்களாக மாற்றும் நோக்கில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சென்னையில் முதல்முறையாக இந்த உணவுத் திருவிழா ஏற்பாடு செய்துள்ளதாக தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உணவுத் திருவிழா தொடர்பாக நீலம் பண்பாட்டு மையத்தின் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,
`கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவு புறக்கணிக்கப்படுவதை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது’.
நீலம் பண்பாட்டு மையம் முன்வைத்த இந்த குற்றச்சாட்டுக்குப் பிறகு, உணவுத் திருவிழாவின் அரங்கு எண். 17-ல் (கரூர்) மாட்டிறைச்சி உணவு வகைகள் விற்கப்படுவதாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.