ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான அனுமதியை அரசு வழங்காது: தங்கம் தென்னரசு | ONGC

தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் நம் மாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும்...
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான அனுமதியை மாநில அரசு வழங்காது என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ராமநாதபுரத்தில் 20 இடங்களில் எண்ணெய் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது. மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் அனுமதி வழங்கப்பட்டதன் மூலம், ஒவ்வொரு கிணறும் சுமார் 2,000 முதல் 3,000 மீட்டர் ஆழத்துக்குத் தோண்டப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின. இதற்கான ஒப்புதலைத் திரும்பப் பெறக்கோரி தமிழ்நாட்டிலிருந்து குரல்கள் எழத் தொடங்கின.

இந்நிலையில், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் வழங்கப்பட்ட ஒப்புதலை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான அனுமதியை அரசு வழங்காது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்புடைய அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது

"தமிழ்நாடு அரசு, கடந்த 20.02.2020 அன்று தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல (Protected Agricultural Zone – PAZ) சட்டம், 2020ஐ இயற்றியதன் மூலம் காவிரி டெல்டா பகுதியினை, பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்தது. இச்சட்டத்தின் அடிப்படையில், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகள் ஆகிய டெல்டா பகுதிகளில் புதிதாக எரிபொருள், இயற்கை வாயு, நிலக்கரி மீத்தேன் மற்றும் ஷேல் வாயு போன்றவற்றின் இருப்பு குறித்த ஆராய்ச்சி, மற்றம் அகழ்வுத் தொழில்கள் ஆகியவை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டது. மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு இத்தடை மயிலாடுதுறை மாவட்டத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இதற்கிடையில், எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனமானது, இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் இருப்பு குறித்து ஆய்வு செய்ய விண்ணப்பித்திருந்தது. இதற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஓஎன்ஜிசி-க்கு சுற்றுச்சூழல் அனுமதியினை நேரடியாக வழங்கியுள்ள செய்தி தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

இதனை அடுத்து ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியினை உடனே திரும்பப் பெறுமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதியிலும், ஹைட்ரோகார்பன் தொடர்பான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திடமான கொள்கை முடிவாகும். எனவே, தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் நம் மாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும் இத்திட்டங்களைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thangam Thenarasu | ONGC | Hydrocarbon | Ramanathapuram

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in