
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விரைவில் புதிதாக 2,708 உதவிப் பேராசிரியர்கள் நிரந்தரமாகப் பணியமர்த்தப்படுவார்கள் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடந்த நான்கரை ஆண்டுகளில் 37 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை வழங்கியதுடன், இந்தக் கல்வி ஆண்டு மட்டும் 16 புதிய கல்லூரிகளை அறிவித்து தொடங்கியதுடன், 15,000-க்கும் மேற்பட்ட கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களுக்கும் ஒப்புதல் அளித்து சேர்க்கை பெற்றுள்ளனர். நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்பவும் அந்தந்த பகுதியில் உள்ள தொழில் முறைக்கு ஏற்ற பல்வேறு புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் கல்வி கற்கும் திறன் எவ்வகையிலும் பாதிப்படையக் கூடாது என்ற எண்ணத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்பட தற்போது முதல்வர் ஆணையிட்டுள்ளார். மேற்படி உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.