காஸா மீதான தாக்குதலுக்குக் கண்டனம்: பெரியாரிய உணர்வாளர்கள் பேரணி | Gaza |
காஸாவின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைக் கண்டித்துச் சென்னையில் 31 பெரியாரிய உணர்வாளர் அமைப்புகள் இணைந்து பேரணி நடத்தினர்.
பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தில் 65,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், காஸா மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்துப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் 31 பெரியாரிய உணர்வாளர் அமைப்புகள் சார்பில் சென்னை புதுப்பேட்டை முதல் எழும்பூர் வரை பேரணி நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து எழும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், பாலஸ்தீன துண்டை அணிந்தபடி விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சத்யராஜ், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய நடிகர் சத்யராஜ், ”மனித குலத்தின் மேம்பாட்டுக்காகவே விஞ்ஞான வளர்ச்சி பயன்பட வேண்டும். ஆனால் சில கொலைகாரர்கள் மனித உயிர்களைக் கொல்வதற்காக அதைப் பயன்படுத்துகிறார்கள். அது கண்டனத்துக்கு உரியது. காஸா மீது நடத்தப்படும் மனிதாபிமானமற்ற தாக்குதலைப் பார்க்கவே சகிக்கவில்லை. காஸாவில் நடப்பதைப் போலத்தான் இலங்கையில் தமிழ் ஈழப் போராளிகளும் பொதுமக்களும் கொல்லப்பட்டார்கள். உலக நாடுகள் இதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். சென்னையில் கூட்டம் நடத்தினால் காஸாவில் போர் நிற்குமா எனக் கேட்கலாம். இன்றுள்ள சமூக ஊடக சக்தி அதை நடத்திக் காட்டும். திரைத்துறையினரான எங்களது புகழ் மனித குலத்தின் நன்மைக்காக பயன்பட வேண்டும் என்று விரும்புகிறேன். காஸாவில் நடக்கும் கொடூரத்தை மதமாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது” என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், நான் காஸாவின் கலைஞர்கள் பேசுவதை இங்கே பேசுகிறேன் என்று கூறி காஸாவில் எழுதப்பட்ட கவிதை ஒன்றின் கருத்துகளைப் பகிர்ந்தார். அதன் பின், ”நாம் அனைவரும் சேர்ந்து உலகத்திற்கு ஒன்று சொல்ல வேண்டும். நம் உடம்புக்குக் காயம் ஏற்பட்டால் நாம் மௌனமாக இருந்தால் அந்தக் காயம் ஆறிவிடும். ஆனால் நாட்டுக்கும், மனிதநேயத்திற்கும் காயம் ஏற்பட்டால், அதைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்தால் அது அதிகமாகும். அதனால், நாம் போராட வேண்டும். காஸாவில் நடப்பதற்கு இஸ்ரேல் மட்டும் காரணம் இல்லை. அதை எதிர்த்துப் பேசாத ஒவ்வொரு மனிதனும் காரணம்” என்று தெரிவித்தார்.
அதன்பின் பேசிய இயக்குநர் வெற்றி மாறன், “எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, கொல்லப்படுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் ஆதரவாக இருப்பதுதான் ஒரு கலைஞனின் பொறுப்பு. பாலஸ்தீனத்தில் நடப்பது நூற்றாண்டுகளாகத் திட்டமிடப்பட்ட ஒரு இனப்படுகொலை. அங்கிருக்கும் பள்ளிகளிலும் மருத்துவமனைகளிலும் பொதுமக்களும் பெண்களும் குழந்தைகளும் தஞ்சம் அடைந்திருப்பதைத் தெரிந்தே குண்டுகளை வீசுகிறார்கள். தற்போது காஸா பஞ்சப் பகுதி என்று ஐநாவால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தில் ஒருவர் பசியால் இறக்கிறார் என்பதைப் பஞ்சத்திற்கான அறிகுறியாக ஐநா சொல்கிறது. இத்தகைய திட்டமிட்ட இனப்படுகொலையை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டும். மாற்றம் ஒரே நாளில் நடந்துவிடாது ஆனால் தொடர்ந்து நாம் நம் எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்த வேண்டும்.